கமல் ஹாசனுக்கு அரசியல் ஞானோதயம் கிடையாதுங்க; அவருக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழனது தலையிலும் ரூ.45 ஆயிரம் கடனை சுமத்தப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பட்ஜெட்டில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்களுக்கு சிறப்பான திட்டங்கள் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை, பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருந்தார்.

கமல் ஹாசனுக்கு ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். சிவகாசியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் கூறியதை பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், கமல் ஹாசனுக்கு அரசியல் ஞானோதயம் இல்லை; அவருக்கு எதுவும் தெரியாது. அவர் கூறியதைப் பொருட்படுத்த தேவையில்லை என்று கூறினார். 

பாஜக மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கட்சியின் கொள்கைக்கேற்ப முதலமைச்சர், துணை முதலமைச்சர் இது குறித்து முடிவெடுப்பார்கள் என்றும் அதனை கட்சியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கடம்பூர் ராஜு கூறினார்.