kamal do not have political wisdom said h raja

கமலுக்கு அரசியல் ஞானம் கிடையாது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

கமலின் அரசியல் பிரவேசம் உறுதியாகிவிட்டது என்றே கூறலாம். கட்சியின் பெயரை அறிவிப்பது மட்டுமே அவரது அரசியல் பிரவேசத்தின் எஞ்சிய நடவடிக்கையாக உள்ளது.

தனது 63-வது பிறந்ததினமான நேற்று, அரசியல் வருகையின் முன்னோட்டமாக செல்போன் செயலியையும் ஹேஷ்டாக்குகளையும் கமல் அறிமுகம் செய்தார்.

அப்போது, கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இந்துத்துவா தீவிரவாதம் குறித்த தனது கருத்துக்கு எதிராகவும் தனக்கு எதிராகவும் எழுந்த விமர்சனத்துக்கும் கமல் பதிலளித்தார். தான் இந்துவிரோதி அல்ல என தெரிவித்த கமல், தான் ஒரு நாஸ்தீகன் இல்லை; பகுத்தறிவாளன் எனவும் விளக்கமளித்தார்.

மேலும் தான் அரசியலுக்கு வந்தபிறகு ஊழல் செய்தவர்களுக்கு தனது இயக்கத்தில் இடம் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். 

அரசியலுக்கு வருவதை திட்டவட்டமாக கமல் தெரிவித்துவிட்ட நிலையில், அவருக்கான ஆதரவுகளும் அதேநேரத்தில் அவருக்கு எதிரான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், கமலின் அரசியல் பிரவேசம் குறித்து எச்.ராஜா விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, கமலுக்கு சினிமா ஞானம் உள்ளது. ஆனால் அதேநேரத்தில் சினிமாவில் இருப்பதைப்போல, அரசியலில் ஞானம் கிடையாது என விமர்சித்துள்ளார்.