kamal congrats rajini for his political entry
ரஜினியின் அரசியல் வருகைக்கு கமல்ஹாசன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். தனிக்கட்சி தொடங்கி அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அவரது கட்சி போட்டியிடும் என்றும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் என்பது அவரது ரசிகர்களால் 1996லிருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்த ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கி நேரடி தேர்தல் அரசியலில் இறங்குவதை உறுதிப்படுத்திவிட்டார்.
தமிழ்நாட்டு அரசியல் மிகவும் மோசமாகிவிட்டது. தமிழக அரசியலைக் கண்டு மற்ற மாநிலத்தினர் சிரிக்கின்றனர். அந்த அளவுக்கு தமிழக அரசியல் மோசமாகிவிட்டது. இந்த நிலையிலும் என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஜனநாயக ரீதியில் நான் நன்மை செய்யாவிட்டால், சாகும்வரை அந்த குற்ற உணர்வு எனக்குள் இருக்கும் என தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு அரசியல் கட்சியினரும் சினிமா பிரபலங்களும் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்தும் வருகின்றனர்.
ரஜினிக்கு முன்னதாகவே தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்ட கமல், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக.. வருக.. என கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமலின் வாழ்த்துக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
