நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதிலும் உள்ள கிராமங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் கிராம சபைகளுக்கு  உள்ள அதிகாரங்கள் குறித்தும் கிராம மக்களிடையே விழிப்புணர்வை எற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் திமுக தலைவர் கடந்த ஒரு மாதமாக  தமிழகம் முழுவதும் சென்று கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் பார்த்திபன், கமல்ஹாசனைப் பார்த்து பலர் கிராம சபை கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர் என மறைமுகமாக ஸ்டாலினுக்கு எதிராக கூறினார். 

இதனிடையே சென்னையில் மாணவர்களிடையே பேசிய கமல்ஹாசன், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் சிலர், நான் நடத்தும் கிராமசபை கூட்டங்களைப் பார்த்து காப்பி அடிப்பதாக கிண்டல் செய்தார்.

மேலும், நான் சட்டமன்றத்தில் கூட சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன், அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டை மாற்றிக்கொண்டு தான் வருவேன் என்று கிண்டலாக பதிலளித்தார். கமல்ஹாசனின் இந்த பேச்சு திமுகவினரை கடுப்பாக்கியுள்ளது.

இது குறித்து சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் 
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது என்று தெரிவித்தார்.

நீண்டகாலமாகவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமங்களுக்கு செல்வதாக அவர் குறிப்பிட்டார். கமல்ஹாசனின் தொடர் விமர்சனங்களுக்கு தக்க பதில் தரப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.