”பி.ஜே.பி.யின் பி-டீம்தான் கமல்ஹாசன்! எதிர் திசையில் நின்று மோடிக்கு உதவிக் கொண்டிருக்கிறார்! கமலுக்கு கொடுக்கப்பட்ட அஸைன்மெண்டே திராவிடம் மற்றும் நாத்திகம் பேசி, தி.மு.க.வுக்கு பாயும் வாக்குகளை பிரித்துச் சிதறடிக்க வேண்டும் என்பதே!’ என்று கடந்த சில நாட்களாக ஒரு விமர்சனம் வலுப்பெற்று வந்து கொண்டே இருக்கிறது. 

நமது ஏஸியாநெட் இணையதளமும் இந்த விமர்சனங்களை மிக சரியான நேரத்தில் கோடிட்டுக் காட்ட தவறுவதேயில்லை. இந்நிலையில், கோயமுத்தூரில் நேற்று நடந்த மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரசார நிகழ்வில், கமல்ஹாசனின் தாக்குதல் முழுக்க முழுக்க ஸ்டாலினை நோக்கி இருந்ததால் இந்த விமர்சனத்துக்கு கூடுதல் அழுத்தம் கிடைத்திருப்பதை அடிக்கோடிடுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

இது பற்றி பேசும் அவர்கள் ”ரஜினி வெறுமனே கட்சி துவங்கும் முடிவை அறிவித்ததற்கே அவர் மீது ‘இது திராவிட மண். இங்கே ஆன்மீக அரசியல் எதுவும் செய்துவிட முடியாது.’ என பாய்ந்தார் ஸ்டாலின். ஆனால் கமல்ஹாசன் கட்சியே அறிவித்துவிட்டபோதும் பெரிதாய் விமர்சிக்கவில்லை ஸ்டாலின். வெறுமனே ‘காகித பூக்கள் மணப்பதில்லை’ என்று முடித்துக் கொண்டார். அதன் பிறகு ஸ்டாலின், கமல் இருவருக்குமான நட்பு பெரிய உரசல் இல்லாமலேதான் நகர்ந்தது. 

திராவிடம், நாத்திகம் என தங்கள் கொள்கை பேசியதால் தேர்தல் நேரத்தில் கமலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது ஸ்டாலினின் எண்ணம். ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க ஸ்டாலினின் நட்பு எல்லையிலிருந்து கமல் நகர்ந்து கொண்டே போனார் வெளியே. ‘ஊழல் பொதி தி.மு.க. அவர்களோடு கை குலுக்கி என் கரத்தை ஏன் அழுக்காக்க வேண்டும்?’ என்றார். இது ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சி. அதன் பிறகுதான் ‘கமல், மோடியின் பி டீம். கமலும், கவுதமியும் பிரிவது போல் நடித்து மோடியின் அரசியலுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். கவுதமி நேரடியாக மோடியை புகழ்ந்து அவருக்கு வலு சேர்க்கிறார். ஆனால் கமலோ மோடிக்கு எதிரானவர்களை அடித்து, விமர்சித்து பி.ஜே.பி.யின் கரத்தை வலுப்படுத்துகிறார். 

எனவே இருவருக்கான முதலாளியும் மோடியே.” என்று போட்டுடைத்தனர். இதில் மிரண்ட ஸ்டாலின், ‘யாருங்க கமல்ஹாசன், நடிகர் தானே?’ என்று எங்கோ ஒரு வார்த்தையை உதிர்த்துவிட்டார். இதையே பிடியாகப் பிடித்துக் கொண்டு, கோவை கூட்டத்தில் அவரை வெளுத்தெடுத்திருக்கிறார் கமல். ‘எதிர்க்கட்சி தலைவர் ‘யாருங்க கமல், நடிகர்தானே?’ன்னு கேட்டிருக்கிறார். ஆமா நான் நடிகர்தான்! ஆனால் நேர்மையான நடிகன். வருமான வரியை சரியாக செலுத்தும் நடிகன். அவரைப்பார்த்து ‘யார் நீ?’ன்னு நான் கேட்கலாம். கேட்டால் ‘அப்பாவுடைய மகன்’ன்னு சொல்லுவார்.

 

அதென்ன நடிகன்னா அவ்வளவு பயமா? ஏன் இந்த பயம்? ஓ............ஏற்கனவே ஒரு நடிகரிடம் ஆட்சியை இழந்த பழைய பயமா? அவரால் அரசியல் மற்றும் ஆட்சி வனவாசம் போக வேண்டிய நிலை வந்ததால் பயமா! எங்கே பழையபடி இன்னொரு நடிகன் சட்டமன்றத்தினுள் நுழைந்துவிடுவானோ? என்கிற பயம் அப்படித்தானே. இன்று அரை மனதுடன் என்னை ‘நல்ல நடிகன்’ என்று ஏற்றுக் கொண்ட நீங்கள், கூடிய விரைவில் ‘நல்ல அரசியல்வாதி, நல்ல தலைவன்’ என ஏற்கும் நாள் வரும்.  

என்னை உரசவேண்டாம்! இலங்கையில் தமிழர்கள் இறக்கட்டும் கவலையில்லை என்று கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள், இன்று ஒன்று சேர்ந்து கைகுலுக்கியபடி தேர்தலை சந்திக்கிறார்கள். (தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி)’ அப்படின்னு வெளுத்தெடுத்துட்டார். ஸ்டாலின் மீது இந்தளவுக்கு பாய்ந்து பிடுங்குமளவுக்கு கமல்ஹாசனுக்கு அவர் மீது அப்படியென்ன கோபம்? அவரது தன்மானத்தை தாறுமாறாக காயப்படுத்துமளவுக்கு ஸ்டாலின் ஏதாவது பேசிவிட்டாரா? என்று பார்த்தால், அப்படியொன்றுமே இல்லை. அப்படியானால் ஏன் இந்த பாய்ச்சல்? ஓ, டெல்லி சிக்னலோ! இப்படித்தான் எண்ணிட வைக்கிறது கமலை.” என்கிறார்கள். உங்க அரசியலும் புரியமாட்டேங்குதே ஆண்டவா?