kamal ask time for meet edappadi

தமிழக முதலமைச்சரை சந்தித்து காவிரி பிரச்சனையில் மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதால் அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் கண்டிப்பாக நேரம் ஒதுக்கப்படும் என நம்புவதாகவும் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12ம் தேதி நடைபெற இருக்கிறது. அதை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாக தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றன.

இதற்கிடையே மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்றுடன் காலக்கெடு முடியும் நிலையில், இதுவரை எந்த வாரியமும் அமைக்கப்படவில்லை.

மேலும் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கால அவகாசம் முடியும் வரை பொறுத்திருப்போம் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சரை சந்தித்து காவிரி பிரச்சனையில் மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதால் அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் கண்டிப்பாக நேரம் ஒதுக்கப்படும் என நம்புவதாகவும் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.