கமலை கூட்டணிக்கு அழைத்த விவகாரத்தில் கே.எஸ்.அழகிரி மீது தி.மு.க தரப்பில் இருந்து காங்கிரஸ் மேலிடத்திற்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்ற உடன் டெல்லி சென்று திரும்பிய அழகிரி நேராக ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதற்கு காரணம் கூட்டணியில் கமலை இணைக்க வேண்டும் என்று ராகுல் கூறியது தான். ராகுலின் தூதுவராக ஸ்டாலினை சந்தித்து கமல் குறித்து பேசினார் அழகிரி. ஆனால் வழக்கம் போல் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஸ்டாலின். 

இந்த தகவல் தெரிந்த கமல் வலுக்கட்டாயாக அனைத்து மீடியாக்களையும் அழைத்து தி.முக. ஒரு ஊழல் கட்சி, ஊழல் பொதியை சுமக்க நான் தயாராக இல்லை என்று அதிரடியாக பேட்டி அளித்தார். இந்த பேட்டி தி.மு.க தரப்பை மிகவும் கடுப்பாக்கியுள்ளது. இதனால் வாகை சந்திரசேகரை வைத்து கமலுக்கு எதிராக காட்டமான அறிக்கை விட வைத்தனர். போதாக்குறைக்கு கமலை கழுதை என்று விமர்சித்து சந்திரசேகர் பேட்டியும் கொடுத்தார்.

 

இப்படி தி.மு.க – கமல் இடையே பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கமல் தி.மு.க கூட்டணியில் இணைய வேண்டும் என்று அழகிரி பேட்டி கொடுத்தார். இந்த பேட்டி தான் தி.மு.க தலைமையை கொதிக்க வைத்துள்ளது. தி.மு.க கூட்டணிக்கு வர வேண்டும் என்று கமலை அழைக்க அழகிரி யார்? என்று கொந்தளித்துள்ளனர். மேலும் நான்கு அறைக்குள் பேச வேண்டியதை அழகிரி எப்படி பொதுவாக பேசலாம்? என வரிந்து கட்டியுள்ளனர்.

 

கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது தி.மு.க. இதில் ஏதேனும் சமரசம் என்றால் ஒருவருக்கு ஒருவர் பேசித் தீர்க்க வேண்டும். மாறாக தி.மு.கவை ஊழல் கட்சி என்று கூறியுள்ள கமலை எங்கள் கூட்டணிக்கே வருமாறு கெஞ்சும் வகையில் அழகிரியை அழைக்க யார் அதிகாரம் கொடுத்தது என்று கோபப்பட்டுள்ளனர். மேலும் கூட்டணி தொடர்பாக அழகிரி வெளிப்படையாக பேசுவது சரியில்லை என்றும் காங்கிரஸ் மேலிடத்திற்கு தி.மு.க தரப்பில் இருந்து புகார் சென்றுள்ளது. 

ஆனால் இந்த புகாரை காங்கிரஸ் மேலிடம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அழகிரி உசாராகிவிட்டார். தேர்தல் நேரத்தில் தி.மு.கவை பகைத்துக் கொண்டால் கடலூரில் போட்டியிடும் போது பிரச்சனையாகிவிடும் என்று அழகிரி கருதியுள்ளார். எனவே உடனடியாக கமலுக்கு கண்டனம் தெரிவித்த ஒரு அறிக்கை வெளியிட்டார் அழகிரி. இதன் மூலம் தி.மு.க தரப்பை சமாதானம் செய்துவிடலாம் என்று அழகிரி நினைத்துள்ளார். அதற்கு கை மேல் பலனாக தி.மு.கவும் அழகிரியின் அறிக்கை மூலம் சாந்தமாகிவிட்டதாக கூறுகிறார்கள்.