கர்நாடகாவில் உள்ள  அணைகள் அனைத்தும் தொடர் மழையால் நிரம்பியுள்ளதையடுத்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகளை அழைத்து பாகினா எனப்படும் தண்ணீருக்கான சிறப்பு பூஜைகளை செய்யலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் அணைகள் நிரம்பினால் பாகினா எனப்படும் தண்ணீருக்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனையடுத்து கேஆர்எஸ் அணையில் வரும் 20 ஆம் தேதி பாகினா என்னும்  சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் குமாரசாமி செய்து வருகிறார்.

இது தொடர்பாக பெங்களூரு மிரர் இதழுக்கு பேட்டியளித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்  கமல்ஹாசன், தற்போதுள்ள சூழ்நிலையில் இரு மாநில விவசாயிகளையும் அழைத்து  பாகினா பூஜைகள் நடத்துவதன் மூலம் அவர்களிடையே  நல்லுறவையும், நம்பகத் தன்மையையும் உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தை கட்சிகள் அரசியலாக்குவதும் இதன் மூலம் தவிர்க்கப்படும் என்றும், தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் இரு தரப்பிலும் உட்கார்ந்து பேசுவதாற்கான சாதகமான  நிலையை இது  உருவாக்கும் எனவும்  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த பருவ காலத்தில் இரு மாநில விவசாயிகளும் சந்தித்துப் பேசினால் மனிதாபிமான செத்துப்போகும் நிலை தவிர்க்கப்படும் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பூஜைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் அழைக்கவேண்டும் என கமல் குரல் கொடுத்துள்ளார். 

இது போன்ற ஒரு உதாரணத்தை இரு மாநில முதலமைச்சர்களும் உருவாக்கும்போது. விவசாயிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அவசர காலங்களில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளமுடியும் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் வேண்டுகோள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் குமாரசாமி, தான் ஏற்கனவே இது குறித்து இரு மாநில விவசாயிகளிடம் பேசியுள்ளதாகவும். தமிழக விவசாயிகளுக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுப்போது, அதிகமாக மழை பெய்யும் காலங்களில் மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேலும் சில அணைகளை கட்ட வேண்டும் என்றும், அதற்கு முன்பாக தமிழக மற்றும் கர்நாடக விவசாயிகளிடையே நல்ல நம்பிக்கையை  உருவாக்க வேண்டும் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.