kalvai ship merge into coast guard...prime minister modi dedicated to nation

பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றான ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பல், கடற்படையில் இன்று முறைப்படி இணைந்தது. மும்பையில் நடந்த விழாவில், பிரதமர், நரேந்திர மோடி இதை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

இந்திய கடற்படையின் முதல் நீர்மூழ்கி கப்பலான, கல்வாரி, 1967ல் இணைக்கப்பட்டது. 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த அது, 1996ல், படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடற்படைக்கு, ஆறு ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, பிரான்ஸ் நாட்டின், 'டி.சி.என்.எஸ்.,' நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், மும்பையைச் சேர்ந்த மசாகான் கப்பல் கட்டும் நிறுவனம், புதிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியது. முதல் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானங்கள் முடிந்து, மூன்று மாதங்களாக பல்வேறு சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டது.

மிகவும் வெற்றிகரமாக முடிந்த இந்த சோதனைகளுக்குப் பின், ஐ.என்.எஸ் கல்வாரி என பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல், கடற்படையில் இணைக்கப்பட்டது. மும்பையில், இன்று நடைபெற்ற விழாவில், பிரதமர், நரேந்திர மோடி இதை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடற்படை தளபதி, சுனில் லம்பா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

67.5 மீட்டர் நீளமும் 12.3 மீட்டர் உயரமும் கொண்ட மிகவும் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ள இந்த நீர்மூழ்கி கப்பலை, ரேடாரால் கண்காணிக்க முடியாது. அதிக சப்தம் எழுப்பாமல் பயணிக்கும் திறன் உள்ளது. மேலும், ஆழ்கடலில் இருந்து அதிநவீன ஏவுகணைகளை செலுத்தும் வசதியும் இதில் உள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல் இணைவதால், கடற்படையின் பலம் அதிகரித்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.