டி.டி.வி.தினகரனை சந்தித்து தனது ஆதரவு தெரிவித்த கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு தன்னை பணி செய்ய விடாமல் மாவட்ட  அமைச்சர் தடுத்தால்தான் தினகரனுடன் இணைந்ததாக அதிரடியாக தெரிவித்தார்..

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு மிக விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் அதிமுக ஆட்சி கவிழும் என்று டி.டி.வி.தினகரன், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர் ஆருடம் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு இன்று டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தினகரனுக்கு மலர்கொத்து வழங்கி தன்னை அவருடன் இணைத்துக் கொண்டார்.

இதைத் தொடந்து  செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, டி.டி.வி.தினகரனுக்குத்தான் மக்கள் செல்வாக்கு இருப்பதாக  தெரிவித்தார். எனவே அவருடன் இணைந்து செயல்படப் போவதாகவும் கூறிய அவர், தொகுதி மக்களுக்கு பணியாற்ற நினைக்கும் போதெல்லாம் அமைச்சர் அதற்கு முட்டுக் கட்டை போட்டு வருவதாக குற்றம்சாட்டினார். .

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்காதது தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் யாரும் அதன்மீது கவனம் செலுத்தவில்லை என்றும் முதலமைச்சர் மீது குற்றம்சாட்டினார்.

விவசாயம் செய்து வரும் பிரபு ஒப்பந்ததாரர், லாரி உரிமையாளர் என பல தொழில்களை செய்து வருகிறார். 1996 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இருக்கும் அவர் தற்போத தியாகதுருகம் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராக உள்ளார்.

மேலும் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு  அச்சகம் மற்றும் பெரிய மாம்பட்டு கூட்டுறவு சங்க இயக்குநராக உள்ளார்.