சபாநாயகரின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்த அதிமுகவைச் சேர்ந்த ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மூவருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுருக்கிறது. சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவை செயலகத்தில் திமுக மனு அளித்தது.


மேலும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக் கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. திமுகவைத் தொடர்ந்து ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் சபாநாயகரின் நடவடிக்கைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். மற்றோரு எம்.எல்.ஏ.வான கள்ளக்குறிச்சி பிரபு மட்டும் வழக்குத் தொடரவில்லை. 
பிரபுவை அதிமுக தங்கள் ஆதரவு நிலைப்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டதாக தகவல்கள் உலாவருகின்றன. சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கட்டுப்பாட்டுக்கு அவர் வந்துவிட்டதாகவும் தகவல்கள் கசிய விடப்படுகின்றன. டிடிவி தினகரோடு கடந்த இரண்டு நாட்களாக அவர் பேசவில்லை என்றும் அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.


இந்நிலையில் தன்னுடைய நிலைப்பாடு குறித்து தனியார் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்துள்ளார் பிரபு. அதில், “சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸூக்கு தடை கோரி நீதிமன்றம் செல்லவிரும்பவில்லை. மற்ற இருவரும் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதுள்ளது அவர்களுடைய வழி. என்னுடைய செயல்பாடுகள் சரியாக இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளேன்.


நான் அதிமுகவில்தான் இருக்கிறேன். அதிமுகவின் ஓர் அணியாக இருக்கக்கூடிய அமமுகவுடன்தான் இருக்கிறேன். அப்படி இருக்க, வழக்கு போட வேண்டிய அவசியம் எழவில்லை. சபாநாயகரிடம் விளக்கம் கொடுக்க தயாராக இருக்கிறேன். இதில் தவறேதும் நடக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை தவறு நடந்தால், சசிகலாவிடம் கேட்டுவிட்டு முடிவெடுக்கத் தயாராக இருக்கிறேன்” என பிரபு தெரிவித்துள்ளார்.