கலைஞருக்கு சிலை! மு.க.ஸ்டாலின் – அழகிரி போட்டா போட்டி! ஜெயிக்கப்போவது யார்?

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 12, Sep 2018, 8:22 AM IST
kalanjar karunanidhi Statue...MK Stalin - Alagiri Contest
Highlights

தி.மு.க தலைவராக இருந்து மறைந்த கலைஞருக்கு சிலை அமைக்கும் விவகாரத்திலும் மு.க.ஸ்டாலின் – அழகிரி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

தி.மு.க தலைவராக இருந்து மறைந்த கலைஞருக்கு சிலை அமைக்கும் விவகாரத்திலும் மு.க.ஸ்டாலின் – அழகிரி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. கலைஞர் மறைவை தொடர்ந்து தி.மு.கவை தனது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஸ்டாலின் அந்த கட்சியின் தலைவராகவும் பதவி ஏற்றுக் கொண்டார். மு.க.அழகிரி எவ்வளவோ முயன்றும் தி.மு.கவில் உறுப்பினராக கூட சேர முடியவில்லை. ஆனாலும் அழகிரி தற்போது வரை ஸ்டாலினுக்கு ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். 

சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி அழகிரி நடத்திய பேரணி வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட அழகிரி மதுரையில் கலைஞருக்கு சிலை அமைக்கும் நடவடிக்கையை தொடங்கினார். மதுரை பால்பண்ணை சந்திப்பில் கலைஞருக்கு சிலை அமைக்க அனுமதி வேண்டி அழகிரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளார். இந்த மனுவிற்கு தற்போது வரை அழகிரிக்கு எந்தபதிலும் அளிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் கூட சிலை அமைப்பதற்கான பணிகளை அழகிரி துவங்கிவிட்டார்.

முதற்கட்டமாக சிலை அமைப்பதற்கான பணியை யாரிடம் கொடுப்பது என்று அவர் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இதனால் கலைஞருக்கு சிலை வைக்கும் விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை அவரது சகோதரர் மு.க.அழகிரி ஓவர் டேக் செய்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக திருவள்ளூர் மீஞ்சூர் அருகே உள்ள சிலை வடிக்கும் சிற்பி தீனதயாளனை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். அப்போது 8 அடியில் அமைய உள்ள கலைஞரின் வெண்கல சிலையின் மாதிரியையும் பார்வையிட்டு ஸ்டாலின் அசத்தியுள்ளார். 

அதாவது அழகிரி சிலை அமைக்க அனுமதி தான் கேட்டுள்ளார். ஆனால் ஸ்டாலினோ சிலைக்கான மாதிரியை பார்த்து கரெக்சனை கூறிவிட்டு வந்துள்ளார். மேலும் ஸ்டாலின் கலைஞரின் எட்டு அடி உயர வெண்கல சிலையை அண்ணா அறிவாலயத்தில் அமைக்க உள்ளார். அதுவும் கலைஞர் மறைந்த 100வது நாளன்று சிலையை அண்ணா அறிவாலயத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலையை அமைக்க ஸ்டாலின் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை. ஆனால் அழகிரியோ மதுரையில் சிலையை அமைக்க அனுமதி பெற வேண்டும். எனவே ஸ்டாலின் – அழகிரி இருவரில் யார் முதலில் கலைஞருக்கு சிலை அமைக்கப்போகிறார்கள் என்று போட்டி ஏற்பட்டுள்ளது.

loader