அமமுக வில் இருந்து நேற்று இரவு நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கலைராஜன்  இன்று திருச்சியில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் இணைந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதையடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து தமிழகம் முழுவதும் அமமுகவிற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அப்போது சென்னையின் முக்கிய தளபதியாக இருந்த முன்னாள் எம்எல்ஏ வி.பி. கலைராஜன் தென் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் தமிழகம் முழுவதும் அமமுக போட்டியிடும் 24 எம்.பி.தொகுதி வேட்பாளர்களையும், 9 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் தினகரன் அறிவித்தார். 

இதனிடையே அதிரடி திருப்பமாக தென் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக இருந்து வந்த வி.பி.கலைராஜன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப் பெயரை உருவாக்கிவிட்டதாலும் கலைராஜனை கட்சியில் இருந்து நீக்குவதாக அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்திருந்தார்.

அண்மைக்காலமாக டிடிவி தினகரனுடன் கருத்து மாறுபாடு காரணமாக கட்சியில் இருந்தும் கட்சியின் செயல்பாடுகளில் இருந்தும் கலைராஜன் ஒதுங்கியிருந்தாகவும், அதே நேரம் திமுகவில் நெருக்கம் காட்டிவந்ததாகவும் கூறப்பட்டது. இதனை ஸ்மெல் பண்ணிய தினகரன் நேற்றிரவு கலைராஜனை கட்சியில் இருந்து நீக்கினார்.

இந்நிலையல் இன்று திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கலைராஜன் திமுகவில் இணைந்தார். தேர்தல் பிரச்சாரத்துக்காக திருவாரூர், தஞ்சாவூர் சென்றிருந்த ஸ்டாலின் இன்று திருச்சியில் பரப்புரை மேற்கொள்கிறார். 

இதையடுத்து நேரடியாக திருச்சி சென்ற கலைராஜன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணியித்த கலைராஜன் திமுகவில் சேர்ந்தார்.