வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்காக பிரச்சாரம் செய்ய அதிமுக புள்ளிகள் ஒருபக்கம்,  ரஜினி மக்கள் மன்றத்தினர் ஒரு பக்கம் என வேலூரியில் வெறித்தனமாக ஒட்டு வேட்டையில் இறங்கியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தன் பங்கிற்கு ஏசிஎஸை ஜெயிக்கவச்சே தீருவேன் என ஓடி ஓடி வேலை செய்து வருகிறார்.

வருமான வரி சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டதன் காரணமாக ஏப்ரல் 16ஆம் தேதி ரத்துசெய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 

ஜூலை 10ஆம் தேதி தொகுதிவாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. 71 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் குழு நியமிக்கப்பட்டது. டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மற்றும் வேலூர் மாவட்டச் செயலாளர்களான ஆர்.காந்தி, நந்தகுமார், முத்தமிழ் செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

திமுகவை காட்டிலும்  அதிமுகவில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனுவாசன், ஆர்.வைத்தியலிங்கம் எம்.பி, தங்கமணி, செங்கோட்டையன்,  எஸ்.பி.வேலுமணி,  சி.வி.சண்முகம்,  கே.பி.அன்பழகன் என இவர்களுக்கு கீழ்  3 மடங்கு அதிகமாக அதாவது, 209 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக இன்று நியமித்துள்ளது. இவர்கள் அனைவரும் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து திங்கள் கிழமை முதல் தேர்தல் பணிகளை இறங்கவுள்ளனர். இவர்களை தவிர ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரும் சில தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்களாம். 

இது தவிர, ஏசிஎஸ்ஸுக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்றமும் சைலண்ட்டாக வேலையை தொடங்கியுள்ளதாம். ஏசி சண்முகம் ரஜினியின் நண்பர் என்பதால் கமுக்கமாக களமிறங்கியதாக தெரிகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கையில், சினிமா பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளார். ஏசிஎஸ்ஸை எப்படியும் ஜெயிக்க வச்சே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு காலத்தில் இறங்கியுள்ளார். தொகுதிமுழுக்க தனது நண்பர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள் அவர்களின் உறவினர்கள் என தொகுதி முழுக்க உள்ள நெருக்கமானவர்களை ஏசிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஒட்டு கேட்க சொல்லியுள்ளார். இவர் தனது சொந்த பணத்தை செலவழைத்து இங்கே தேர்தல் வேலை பார்ப்பதாகவே சொல்கிறார்கள். மேலும் நடிகைகள் சிலரை வாக்கு சேகரிக்க அழைத்து வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியல் ரீதியாக முக்கியமில்லாதவராக இருந்தபோதிலும், மதிமுகவுக்கும், வைகோவுக்கு மிக முக்கியமானவர் தான் இந்த பிரமாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. இன்று மதிமுக தலைமைக் கழக அலுவலகம் அமைந்துள்ள இடத்துக்குச் சொந்தக்காரர் இதே தாணுதான். மதிமுக தொடங்கியபோது அலுவலகம் அமைக்க இடம் இல்லாமல் வைகோ தவித்தபோது எழும்பூரில் உள்ள எனது இடத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று இலவசமாகவே கொடுத்தவர் தாணு. அன்று முதல் இன்று வரை அவரது இடத்தில்தான் மதிமுக தலைமைக் கழகம் செயல்பட்டு வருகிறது.

மதிமுக விலிருந்து  பல முக்கியப் புள்ளிகள் விலகிச் சென்றபோதிலும் தாணு மட்டும் வைகோவுடனேயே இருந்து வந்தவர். இந்த நிலையில் அவரது இளைய மகன் திருமண அழைப்பிதழை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கொடுத்ததற்காகவே அவருக்கும், வைகோவுக்கும் சின்ன மனக்கஷ்டம் ஏற்பட்டதால் மதிமுகவை விட்டு விலகினார்.  அரசியலை விட்டு விலகியிருந்த கலைப்புலி தாணு அவரது நண்பர் ஏசி சண்முகத்துக்காக களமிறங்கியிருப்பது துரைமுருகன் மகனுக்கு ஒருபக்கம்  கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.