கடந்த பத்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம் சார்பிலான கலைஞர் கருணாநிதி விருது வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு கருணாநிதி ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியிருந்தார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார்  நாடாளுமன்றத்தில் இன்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதையடுத்து  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதி பெயரிலான விருதுகள் வழங்கப்படும் என்றும், இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விருது 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஐம்பொன்னாலான கலைஞர் மு. கருணாநிதியின் உருவச்சிலை, பாராட்டு சான்றிதழை கொண்டது.
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், கலைஞர் கருணாநிதி விருது வழங்க செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருப்பதை ரவிக்குமார் எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் கலைஞர் பெயரிலான விருதை கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருப்பது தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அதன் விளைவாக இன்று அந்த விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரவிக்குமார் எம்பி எடுத்த முயற்சிக்கு உடனடியாகவே பயன்விளைந்திருக்கிறது.” என்று ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.