தமிழகத்தில் கருணாநிதி போல ஒரு ராஜதந்திரி உண்டா..? கருணாநிதியின் சில ராஜதந்திர ஃபிளாஷ்பேக்குகள்.!
இன்றைய தலைமுறையினர் கருணாநிதியின் ராஜதந்திரங்களை அறிந்திருக்கமாட்டார்கள். அரசியலில் கருணாநிதியின் ராஜதந்திரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
மூதறிஞர் ராஜாஜியை ராஜதந்திரி என்று கூறுவது உண்டு. மெட்ராஸ் மாகாண முதல்வராகவும் அவர் இருந்திருக்கிறார். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் இருந்திருக்கிறார். அவருக்குப் பிறகு அரசியலில் மிகச் சிறந்த ராஜதந்திரி என்று கருணாநிதியை மட்டும் தான் சொல்ல முடியும். கூட்டணி கட்சிகளை அவரவணைத்து சென்றதிலோ, கூட்டணிகளுக்கு சீட்டுகளைப் பிரித்து கொடுப்பது எல்லாம் ராஜ தந்திரம் கிடையாது. தன்னுடைய ராஜதந்திரம் மூலம் கட்சிக்கு அனுகூலத்தையும் வெற்றி வாய்ப்புகளையும் உருவாக்கித் தருவதுதான் ராஜதந்திரம். அந்த வகையில் கருணாநிதியின் அரசியல் ராஜதந்திரங்கள் மிகவும் நுணுக்கமானவை. சில வார்த்தைகளாகப் பேசியே அரசியல் போக்கை மாற்றியிருக்கிறார் கருணாநிதி. இன்றைய தலைமுறையினர் கருணாநிதியின் ராஜதந்திரங்களை அறிந்திருக்கமாட்டார்கள். அரசியலில் கருணாநிதியின் ராஜதந்திரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
1996 - காங்கிரஸை அசைத்த கருணாநிதி
1996 வாக்கில் தமிழகத்தில் காங்கிரஸும் ஒரு வலுவான கட்சி. அந்தக் கட்சிக்கு அதிகபட்சமாக 20 சதவீதம் வரை அன்று வாக்கு வங்கி இருந்தது. அதிமுக - காங்கிரஸ் இணைந்தால் வெற்றி என்ற நிலைதான் இருந்தது. அதாவது, அது அசைக்க முடியாத வெற்றிக் கூட்டணியாக இருந்தது. அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் 1991-இல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, கூட்டணி உடைந்துபோனது. அன்று அதிமுக ஆட்சியை காங்கிரஸும் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தது. 1996-இல் அதிமுகவை ஆட்சியை விட்டு இறக்குவது என்று காங்கிரஸ் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தது. ஆனால். தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. அன்று காங்கிரஸ் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த நரசிம்மராவ் அதிமுக கூட்டணியை விரும்பினார். ஆனால், தமிழகத்தில் காங்கிரஸார் அதிமுகவுடன் கூட்டணி கூடவே கூடாது என்று ஒற்றைக் காலில் நின்றனர்.
அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றால், தனித்து நிற்போமா, வெற்றி பெற முடியுமா என்றெல்லாம் நரசிம்மராவ் தமிழக காங்கிரஸாரை குழப்பி விட்டிருந்தார். காங்கிரஸுக்கு தனித்து போட்டியிடவும் பயம், அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்லவும் தயக்கம். இந்த நேரத்தில்தான் திருச்சியில் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், காங்கிரஸ் கூட்டணிக்குள் வந்தால் ஏற்பீர்களா என்று கேள்வி எழுப்பினர். “வந்தால் பரிசீலிப்போம்” ஒரே வார்த்தையில்தான் கருணாநிதி பதில் சொன்னார். கருணாநிதியின் இந்தப் பதில் காங்கிரஸாருக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. திமுகவுடன் செல்லலாம் என்று ஒரு பிரிவினர் பேச ஆரம்பித்தார்கள். அதையும் மீறி நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது, மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் உடைந்து, தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகி, திமுகவுடன் கூட்டணியை வைத்தனர். அந்த கூட்டணியை ரஜினியும் ஆதரித்தார். கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இக்கூட்டணி உருவாவதில் சோவும் முக்கிய பங்கு வகித்தார். ஆனால், அதற்கெல்லாம் காரணமாக இருந்தது ‘ வந்தால் பரிசீலிப்போம்’ என்ற கருணாநிதியின் ஒற்றைப் பதில்தான்.
மூப்பனாருக்கு கட்சியை உடைக்க நம்பிக்கை தந்தது, ரஜினியை அதிமுகவிற்கு எதிராக பேச வைத்தது ஆகியவை, கருணாநிதியின் ”மாஸ்டர் கிளாஸ்” ராஜதந்திரங்கள்.
1999 - பாஜகவுடன் கூட்டணி
பாஜகவை பண்டாரம், பரதேசி கட்சி என்றும் வட இந்திய கட்சி என்றும் மதவாத கட்சி என்றும் காரசாரமாக விமர்சனம் செய்தவர்தான் கருணாநிதி. வாஜ்பாயை ‘தவறான கட்சியில் சரியான மனிதர்’ என்றெல்லாம் பேசியவர். ஆனால், அதே பாஜகவுடன் கூட்டணியை ஏற்படுத்தியவர் கருணாநிதி. 1976-இல் ஒரு முறை ஆட்சிக் கலைப்பு. 1991 இன்னொரு முறை ஆட்சிக் கலைப்பு என இரு முறை ஆட்சிக் கலைப்புகளை எதிர்கொண்டவர் கருணாநிதி. எனவே 96-ல் ஆட்சியை தக்கவைக்காமல் விட்டால் திமுக வெகுவாக பலவீனமாவிடும் அபாயத்தில் இருந்தது.
1996-இல் கருணாநிதி ஆட்சிக்கு வந்த நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தது. ஆனால், அந்த ஆட்சி 1997-இல் கவிழ்ந்தவுடன் 1998-இல் தேர்தல் வந்தது. தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் பாஜக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி 30 தொகுதிகளில் வென்றது. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த அதிமுக, திமுக ஆட்சியைக் கலைக்க வாஜ்பாயை தொடர்ந்து நச்சரித்துக்கொண்டிருந்தது. அது முடியாமல் போகவே, பாஜகவுக்கான ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றார்.
வாஜ்பாய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்குச் சென்றது. வாஜ்பாய் அரசு திமுகவின் ஆதரவையும் கோரியது. அதுவரை பாஜகவை விமர்சித்துக்கொண்டிருந்த கருணாநிதி, ‘ நாட்டின் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டும், நிலையான ஆட்சி தேவை என்பதாலும் பாஜகவை ஆதரிப்பதாக’ அறிவித்தார் கருணாநிதி. தன்னுடைய ஆட்சியையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும், மத்திய அரசின் கூட்டணியிலும் இருக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதி அந்த ராஜந்திர முடிவை எடுத்தார். அந்த ஆதரவை 1999-இல் பாஜகவுடனான கூட்டணியாகவும் மாற்றினார் கருணாநிதி. இதன்மூலம் திமுக மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தது. 2001-இல் கருணாநிதியை நள்ளிரவில் அத்துமீறி அதிமுக அரசு கைது செய்தபோது, அதை பிரதமர் வாஜ்பாய் கடுமையாக எடுத்துக்கொண்டார். அதிமுக ஆட்சியைக் கலைக்கும் அளவுக்கு சென்றார் வாஜ்பாய். ஆனால், அன்று மாநிலங்களவையில் அதிக எம்.பி.க்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் ஒத்துக்கொள்ளாததால், ஆட்சிக் கலைப்பை கைவிட்டார் வாஜ்பாய். அப்போதும் ‘356வது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்பதில் உடன்பாடு இல்லை’ என்று கருணாநிதி கூறி அதிலும் ஸ்கோர் செய்தார்.
2006 - மைனாரிட்டி ஆட்சி
இன்று யோசித்துப் பாருங்கள். மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சியை ஒரு கட்சியால் நடத்த மத்தியில் உள்ள பாஜக அரசு எளிதில் விட்டுவிடுமா? 2006 தேர்தலில் திமுக கூட்டணி மெஜாரிட்டி பெற்றபோதும் திமுக 96 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. கூட்டணி கட்சிகளின் தயவில்தான் ஆட்சியை கருணாநிதியால் நடத்த முடிந்தது. இடையில் இடதுசாரிகள், பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. ஆனால், காங்கிரஸை வைத்துக்கொண்டு முழுமையாக 5 ஆண்டு காலமும் ஆட்சி நடத்திக் காட்டினார் கருணாநிதி. அவ்வபோது காங்கிரஸார் தமிழக அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று அடம் பிடித்தபோதும், மத்தியில் ஆதரவு, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு, காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி என்று காங்கிரஸுக்கு கருணாநிதி வாலைக் காட்டியபோதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்காமலேயே 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தார். இன்று அதே இடத்தில் பாஜக இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 126 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்தபோதும் எடப்பாடி பழனிச்சாமியும் - ஓ.பன்னீர்செல்வமும் மத்திய அரசிடம் இறங்கித்தான் போனார்கள். ஆனால், மெஜாரிட்டி இல்லாமலேயே அதுபோல எதுவும் நடக்காமல் செய்தது கருணாநிதியின் ராஜதந்திரம்தான்.