தமிழகத்தில் நாகை, வேதாரண்யம் இடையே கடந்த 16-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. இந்த புயலால் டெல்டா மாவட்டங்கள் திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 60 பேர்வரை உயிரிழந்துள்ளனர், மக்கள் வீடுகளையும், தோட்டங்களையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். ஏறக்குறைய 3.50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

நாகை மாவட்டத்தில் இன்னும் சில பகுதிகளில் பள்ளிக் கூடங்களில்தான் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் எம்.பி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து  செய்தியாளர்களிம் பேசியஅமைச்சர் செங்கோட்டையன் , கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம் போல் நடைபெறும். ரத்தாக வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பான பயிற்சி அளிக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் 84 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய அரசு பரிசீலனை செய்தால் அதற்கான நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும் செங்கோட்யைன் தெரிவித்தார்..

டெல்டா மாவட்டங்களில் முழுமையான பாதிப்புள்ளாகிய மாணவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கலாம் என முதலமைச்சரிடம்   ஆலோசித்து பின்னர் நிவாரணம் வழங்கப்படும் எனவும் செங்கோட்யைன் தெரிவித்தார்.