மறைந்த காடுவெட்டி குரு வழியை பின்பற்றத் தொடங்கி இருக்கிறார் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ். 

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிடுகிறது. இதில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் ’’இந்த தேர்தலில் என்ன நடக்கும் தெரியுமா? பூத்தில் யார் இருப்பா? நம்மதான் இருப்போம். சொல்றது புரியுதா.. இல்லையா?... யார் வெற்றி பெறப்போறாங்கன்னு சொல்லனுமா வெளியில், என்று அன்புமணி பேசினார். அன்புமணியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக, தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மட்டுமல்ல, ஊர் முக்கிய நபர்களை பார்க்கபோகும்போதெல்லாம் உணர்ச்சியை தூண்டும் வகையில்தான் இப்போது பேசி வருகிறார்.

காடுவெட்டி குரு மறைந்த பிறகு அவர்களின் சமுதாயத்தை இழுக்கும் வகையிலும் அவர்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் வகையிலும் பேசுவதற்கு யாரும் இல்லையாம். அதை தான் இந்த தேர்தலில் அன்புமணி கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.  இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு ஆகி இருக்கிறது. தேர்தல் முடிவதற்குள் இன்னும் வழக்குகள் இதுபோன்ற பேச்சுக்காக வரும்.

எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சிப்பதை விட உணர்ச்சியை தூண்டி களப்பணியை சூடாக்கும் பொறுப்பை இப்போது செய்ய ஆரம்பித்திருக்கிறார் அன்புமணி. ஆக மொத்தத்தில் அன்புமணி காடுவெட்டி குருவை பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்.