வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பிறகு தைலாபுரம் தோட்டத்திற்கும் குருவின் உறவினர்களுக்கும் இடையே வெளிப்படையாக கடும் மோதல் வெடித்தது. குருவின் மனைவி மட்டுமே ராமதாஸ் குடும்பத்துடன் உறவு வைத்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட மற்ற அனைவரும் ராமதாசுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து வந்தனர்.

குறிப்பாக  ராமதாசின்  எதிர்ப்பையும் மீறி குருவின் மகள் விருதாம்பிகை, தனது அத்தை மகன் மனோஜை கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு குருவின் மகன் கனலரசன் மற்றும் குருவின் சகோதரிகள் உள்ளிட்டோர் , பாமக தலைமை மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.

கடந்த டிசம்பர் மாதம் காடுவெட்டியில் நடைபெற்ற குரு மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் குருவின் குடும்பத்திலிருந்து அவரது மனைவி சொர்ணலதா தவிர யாரும் கலந்துகொள்ளவில்லை. மக்களவைத் தேர்தலில் கனலரசன் உள்ளிட்டோர் பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். அதே நேரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கனலரசன் மிகுந்த அமைதி காத்துள்ளார்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் அரங்கில் முத்துவிழா நடைபெற்றது. அதில் ராமதாஸை கடுமையாக எதிர்த்துவந்த குருவின் மகன் கனலரசன் திடீரென கலந்துகொண்டார்.

இந்த விழாவில் ராமதாஸின் காலில் கனலரசன் விழுந்து ஆசி பெறுவது போன்ற புகைப்படமும், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோருடன் சிரித்தபடி போஸ் கொடுப்பது போன்ற புகைப்படமும் பாமகவினரால் சமூக வலைதளங்களில் வெளியானது..

இப்படி கனலரசன் திடீரென சமரசம் செய்து கொண்டு சரண்டர் ஆனது பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த குருவின் மனைவி சொர்ணலதாதான் ராமதாஸ் – கனலரசன் இடையே சமரசம் செய்து வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் குருவின்  சகோதரி, குருவின் மகள் விருதாம்பிகை அவரது கணவர்  மனோஜ் ஆகியோர் இன்னும் ராமதாசுக்கு எதிராக மனநிலையில்தான் உள்ளனர் என கூறப்படுகிறது..