உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த காடுவெட்டி குரு அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த மே மாதம் காலமானார். அவர் மறைவு முதலே அவரது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வர ஆரம்பித்தன.

இந்த நிலையில் குருவின் மகள் விருதாம்பிகை அவரது காதல் கணவர் மனோஜ் கிரணுக்கு குருவின் மற்றொரு தங்கை மீனாட்சி அடைக்கலம் கொடுத்து கும்பகோணத்தில் உள்ள தனது வீட்டில் வைத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். காடுவெட்டி குரு மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக மீனாட்சி தெரிவித்தார்.

ஆனால் பா.ம.க நிறுவனர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் தலையிட்டு குருவுக்கான சிகிச்சையை தடுத்து நிறுத்தி அவர் சாவுக்கு காரணமாகிவிட்டதாகவும் மீனாட்சி கூறினார். குரு மறைந்த சுமார் ஆறு மாதங்கள் வரை ஆக உள்ள நிலையில்  இப்படி சொன்னது குருவின் மீது பற்று வைத்துள்ள ஒட்டுமொத்த வன்னியர்களை அதிரவைத்தது.

இதனைத்தொடர்ந்து பாமகவின் முதுகெலும்பாக இருந்த குருவிற்க்கே இந்த நிலையா என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், குருவின் மகனான கனலரசன் தனது தந்தை மரணத்திற்கு முன்பாக பேசிய சில விஷயத்தை  சொல்லி கண்கலங்கியிருக்கிறார். அதில்,  “பிப்ரவரி 1-ம் தேதி எங்கப்பாவுக்கு பிறந்தநாள். கடந்த வருஷம் பிறந்தநாளுக்கு அப்பாவுக்கு வாழ்த்துச் சொல்ல வந்த டாக்டர் ராமதாஸ் பேசிட்டு கிளம்பினதும், எங்கப்பா எங்களை அழைச்சு ‘யாரையுமே நம்பாதீங்க. யாருக்கும் துரோகம் செய்யாதீங்க.’ன்னு  அழுதுட்டே சொன்னார். அந்த கண்ணீர் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டுதான் அமைதியா இருக்கிறோம். 

டாக்டரய்யா அப்படி எங்கப்பாட்ட என்னதான் சொன்னார்? எங்கப்பா எந்த உண்மையை புரிஞ்சுகிட்டு, மனம் நொந்து அழுதார்ன்னு புரியலை.” என்று சொல்லியிருக்கிறார். 

ஆனால் குருவின் தங்கை மற்றும் மகனின் இந்த பாய்ச்சலை கண்டு டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் பெரும் வருத்தமும், கோபமும் கொண்டிருக்கிறார்கள். ”குரு உயிரோட இல்லைங்கிறதாலே, அவர் சொன்னதாக சொல்லி என்னவேணா பேசுறதா? நம்ம தரப்பு நியாயத்தை துல்லியமா நிரூபிக்க முடியும். 

குருவின் உயிரை காப்பாற்றவும், அவரை ஆரோக்கியமாக வெச்சிருக்கவும் நாங்க ரெண்டு டாக்டர்களும் எடுத்த முயற்சிகளை தேவைப்பட்டால் ஆதாரப்பூர்வமா நிரூபிப்போம்.” என்றிருக்கிறார்களாம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா.ம.க.வின் உட்கட்சிக்குள் உருவாகியிருக்கும் இந்த திடீர் சோதனை பெரிய சரிவுதான் அக்கட்சிக்கு! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.