அண்மையில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின்  வீட்டுக்கடன், வங்கிக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக் கொள்ளும் என்றும், அவரின் குடும்பம் மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவு போன்றவற்றையும் கட்சியே பார்த்துக்  கொள்ளும் என்றும் டாக்டர் ராமதாஸ் உறுதி அளித்துள்ளார்.

வன்னியர் சங்கத் தலைவர், பாமகவின் முக்கிய தூண்களில் ஒருவர், முன்னாள் எம்எல்ஏ என பல சிறப்புகளைப் பெற்ற காடுவெட்டி குரு அண்மையில் உடல் நலக்குறைவால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவையடுத்து காடுவெட்டி குடும்பத்தினர் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியானது. இரண்டு நாட்களுக்கு முன்பு காடுவெட்டி குருவின் உறவினர் ஒருவர், தனது முகநூலில், அவரது வீட்டுகடன், வாகனம் வாங்கிய கடன், மருத்துவ செலவுகளுக்கான கடன் போன்றவற்றை பட்டியலிட்டு, அந்த குடும்பம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், அந்த கடனை அடைக்க குருவின் டெம்போ வாகனத்தை விற்க முடிவு செய்துள்ளதாகவும், அதை வாங்கவும் , குருவின் குடும்பத்தினருக்கு உதவி செய்யவும் விருப்பமுள்ளவர்கள்  குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பதிவிட்டிருந்தார்.

இது பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குருவின் உறவினர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராதாசை சந்தித்துப் பேசினர். அப்போது குருவின் கடன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குருவின் நினைவாக அவரின் வாகனம் அவரது வீட்டிலேயே நிற்கட்டும் என தெரிவித்தார். குருவின் வீட்டுக்கடன், வாகன கடன், மருத்துவ செலவுகளுக்கான கடன் போன்றவற்றை கட்சியே பார்த்துக் கொள்ளும்  என உறுதி அளித்தார்.

குருவின் குடும்பத்தையும்,குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை  செலவுகள் அனைத்தையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என ஊர் பெரியவர்களிடம் ராதாஸ் தெரிவித்தார்..

காடுவெட்டி குரு மிகுந்த பாசத்துடன் பார்த்துக் கொண்டது  போல் அவரின் தாய்,  மனைவி மற்றும் 2 குழந்தைகளையும்  பாமக பார்த்துக் கொள்ளும் என்றும் அவரின்  உறவினர்கள் மற்றும் காடுவெட்டி ஊர் பெரியவர்களிடம்  டாக்டர் ராமதாஸ் தைலாபுரத்தில் உறுதி அளித்தார்.

இதற்கு காடுவெட்டி குருவின் உறவினர்களும், ஊர் பெரியவர்களும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்..