கபசுர  குடிநீருக்கு கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆற்றல் இருப்பதாக சித்த மருத்துவ ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.  கபசுர குடிநீரில் உள்ள ஒவ்வொரு மூலிகைக்கும் வைரஸை  எதிர்க்கும் ஆற்றல் இருப்பது நிருபணமாகி உள்ளதாக அக்குழுவின் இயக்குனர் மருத்துவர் கனகவல்லி தெரிவித்துள்ளார். இது தமிழர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, உலக அளவில்  58 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 3. 57 இலட்சம் பேர் வைரசால் உயிரிழந்துள்ளனர்.  மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் 18 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆங்கில மருத்துவத்துடன் சேர்த்து சித்த மருந்துகளான நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து கலவை கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலன் அளித்து வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் தமிழகத்தில் வழங்கப்பட்டுவரும் கபசுர குடிநீர் போன்ற சிறப்பு குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது ஒரு கட்டுக்கதை கொரோனா வைரசிலிருந்து நோயாளிகளை காப்பாற்றும் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில்,  அவரின் இக்கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் கபசுரக் குடிநீர் குறித்தும், அதன் மகத்துவம் குறித்தும் மருத்துவ ஆராய்ச்சி குழுவின் தலைமை இயக்குனர் டாக்டர் கே.கனகவல்லி விளக்கமளித்துள்ளார். அதாவது கபசுர குடிநீர் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரைப்படி வைரஸ் தொற்றால் பாதித்தவர்களுக்கு இது வழங்கப்பட்டு வருகிறது, இது நோயாளிகளுக்கு காய்ச்சல் இருமல், மூச்சுத்திணறல் போன்றவற்றிற்கு ஆகச் சிறந்த மருந்தாக உள்ளது. சுமார் 15க்கும் மேற்பட்ட மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கபசுர குடிநீரில் கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆற்றல் இருப்பது அதற்கான முதற்கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.  அதற்கடுத்தடுத்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது, கபசுர குடிநீர் மூலம் முழுமையாக கொரோனா வைரசை குணப்படுத்த முடியும் என்று அறிவியல் பூர்வமாக விரைவில் நிரூபிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.