Asianet News TamilAsianet News Tamil

ஒருவன் மனைவி மற்றொருவருடன் பாலியல் உறவை குற்றமாக்கக் கூடாது... பாராட்ட வேண்டிய தீர்ப்பு! கி.வீரமணி கருத்து

ஆண் -& பெண்ணுக்கிடையிலான சுதந்திர பாலியல் உணர்வு குறித்து 85 ஆண்டுகளுக்கு முன்பாகவே தந்தை பெரியார் கூறிய தொலைநோக்குக் கருத்து &  உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய சுதந்திரப் பாலியல் உறவு பற்றிய தீர்ப்பு மூலம் காலம் கடந்து வென்றுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி 

K.veeramani Supreme court judgement
Author
Chennai, First Published Sep 28, 2018, 7:42 PM IST

ஆண் -& பெண்ணுக்கிடையிலான சுதந்திர பாலியல் உணர்வு குறித்து 85 ஆண்டுகளுக்கு முன்பாகவே தந்தை பெரியார் கூறிய தொலைநோக்குக் கருத்து &  உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய சுதந்திரப் பாலியல் உறவு பற்றிய தீர்ப்பு மூலம் காலம் கடந்து வென்றுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்றத்தில் அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பொன்றைத் தந்துள்ளது.

அனைத்து முற்போக்குச் சிந்தனையாளர்களும் வரவேற்றுப் பாராட்ட வேண்டிய, எடுத்துக்காட்டான தீர்ப்பு இத்தீர்ப்பு!

அய்ந்து நீதிபதிகளும் தனித்தனியே தீர்ப்பு எழுதினாலும் ஒத்திசைவான முடிவையே ஏகோபித்துத் தந்து, இதற்குமுன் பிரிட்டிஷ் காலனிய சட்டத்தில் இருந்த மிகப் பெரிய சமூக அநீதியைக் களைந்து பாலியல் நீதியை நிலை நாட்டியுள்ள நல்ல தீர்ப்பு இத்தீர்ப்பு!

பிரிட்டிஷ் ஆட்சியிலும்கூட மனுதர்மமே சட்டமாக - சிவில் சட்டமாக அமைந்தது, காரணம், விக்டோரியா மகாராணியாரின் உரிமைச் சாசனம் என்பதில் அக்கால பார்ப்பனர்களின் மிரட்டலுக்கு அஞ்சி -சீர்திருத்த, மனிதநேயச் சட்டத் திருத்தங்களைக்கூட அன்றைய  வெள்ளைக்கார ஆட்சி மேற்கொள்ளாமல் பின்வாங்கியது -  "மத விஷயங்களில் தலையிடாது" என்ற வாக்குறுதி காரணமாக.

வெள்ளைக்காரன் ஆட்சியிலும் மனுநீதிக்கான இடம்

கொலைத் தண்டனை போன்ற கிரிமினல் சட்டங்களில் மனுதர்ம அடிப்படையை மாற்றிய பிரிட்டிஷ் அரசு சிற்சில திருமணம், திருமண உறவு சம்பந்தப்பட்ட நடைமுறைகளில் இ.பி.கோ.வில்கூட பழைய வைதீக மனுவின் சாயலே பிரதிபலிக்கும் வண்ணம்,  பார்ப்பன வைதீக எதிர்ப்புக்கு அஞ்சி, சட்டங்களை அப்படி வைத்தனர்!

1860-இல் இச் சட்டம் வந்தது!  அதில் ஒன்று திருமண உறவு முடித்தவர்கள், ஆண் எஜமானன் - பெண் அடிமை என்பதையே நிலை நிறுத்திட பல்வேறு அம்சங்களை சட்டத்தில் திணித்து ஏற்கச் செய்தனர்!

சுதந்திரமான பாலியல் உறவுக்கு அங்கீகாரம்...

இ.பி.கோ. என்ற (Indian Penal Code) இந்திய கிரிமினல் சட்டத்தில் - 497ஆவது செக்ஷன் கிபீறீமீக்ஷீஹ் என்ற பிறரின் மனைவியுடன் "சுதந்திரமான பாலியல் உறவு" கொள்வது குற்றமாகாது; வேண்டுமானால் மணவிலக்குக்கு அதை ஒரு காரணமாக கூறலாம்  -  கோரலாமே தவிர, தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாகாது என்று கூறியுள்ளது! ('தகாத உறவு' என்ற  சொல்லாட்சி கூடாது)

இதில் இந்த 497ஆவது பிரிவு -  மனைவிமார்களை இந்த குற்றத்திற்காக தண்டிக்க இயலாத வண்ணம் பல ஆண்டுகளுக்கு முன்பே இச்சட்டத் திருத்தம் வந்தது! காரணம் ஆண்கள் அவர்கள் பல மனைவிகளுடனும்  - திருமணமாகாத பெண்களுடனும் பாலியல் உறவைத் தொடருகையில், அப்பாவி பெண்ணைத் தண்டிப்பது நியாயமற்றது என்ற அடிப்படையில் கூறப்பட்ட,  Adultery  என்ற "உறவின் அடிப்படையில்" பெண்ணை - மனைவியைத் தண்டிக்க முடியாது. ஆண் தண்டனைக்குரியவர் என்ற நிலை நீடித்தது.

கணவன் எஜமானன் அல்ல

இந்தத் தீர்ப்பில் முக்கியமாகத் தெளிவுபடுத்தப்பட்டிருப்பது.

1. கணவன் மனைவிக்கு எஜமானன் அல்ல; மனைவி அடிமை அல்ல; அவர் ஒரு உடைமை அல்ல. மற்றவரின் பாலியல் உரிமையில் தலையிட, மூக்கை நுழைத்து, தண்டனை கொடுப்பது ஏற்கத்தக்கதல்ல என்று முழு சுதந்திர பாலியல் உரிமையை இருசாராருக்கும் சமமாக அங்கீகரித்துள்ளது..

இது மனுதர்மத்தின் அடிப்படையையும், அனைத்து மதங்களிலும் பெண்களின் உரிமை பறிப்புக்கும் எதிரான அதிரடியாகும்!

85 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் கூறியதே!

சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற தலைப்பில் வெளியிட்ட புரட்சிகரமான மனிதநேயச் சிந்தனையை இன்றைய உச்சநீதிமன்றம் ஏற்று தீர்ப்பளித்துள்ளது. பெரியார் வாழுகிறார்; பெரியார் வென்று வருகிறார் என்பதைக் கண்கூடாகக் காட்டுவதாக இத்தீர்ப்பு உள்ளது!

"ஒரு மனிதன் தனக்குப் பிரியமான ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்தமான பலகாரக் கடையில் வாங்குவது போலவும், அவனவனுடைய தனி விருப்பத்தையும், மனச்சார்பையும், மன நிறைவையும் பொறுத்தது ஆகும்; இதில் மற்றவர் தலையிடுவது அதிகப் பிரசங்கித்தனமும், தேவையில்லாமல் மற்றவர் மேல் ஆதிக்கம் செலுத்துவதும் ஆகும்!" என்று கூறியுள்ளார்.

- தந்தை பெரியார்

('பெண் ஏன் அடிமையானாள்' பக்கம் 30)

1971 சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், "ஒருவன் மனைவி மற்றவரை விரும்புவது என்பதை குற்றமாக்கக் கூடாது" என்ற தீர்மானத்தை திசை திருப்பி, தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க.வை அன்று தோற்கடிக்க இதனை ஒரு ஆயுதமாக்கினர். ஆனால், தேர்தல் யுத்தத்தில் படுதோல்வி  அடைந்தனர் - பார்ப்பனர்களும், அவர்களின் அன்றைய கூட்டாளிகளும்!

அது பெரியார் தந்த ஒரு அதிர்ச்சி வைத்தியம்தான்; ஏற்கெனவே இ.பி.கோ. சட்டப்படியே அது குற்றமாகாது என்ற நிலைப்பாட்டையே பகிரங்கப்படுத்தினார் பெரியார்!

என்றும் வெல்வார் பெரியார்!

இன்று உச்சநீதிமன்றம் அதனையும் ஒரு படி தாண்டி ஆணும்கூட தண்டிக்கப்பட முடியாது என்று தெளிவாக்கி, ஒருவர் உடல் - உறவு மீது மற்ற எவரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது; காரணம் அவர்கள் எஜமான் - அடிமை உறவுள்ளவர்கள் அல்ல என்று தெளிவுபடுத்தி மனுமாந்தாக்களின் முதுகெலும்பை முறித்து - 85 ஆண்டுகளுக்கு முன்பு பெரியாரின் கைத்தடியால் -  உடைக்கப்பட்ட அந்தக்  கருத்துக்கு சட்டப் பாதுகாப்பை - அங்கீகாரம் - செய்து தந்துள்ளது இந்திய உச்சநீதிமன்றம்!

என்றும் பெரியாரே வெல்வார்; காரணம் பெரியார் என்ற தத்துவம் ஒரு சமூக விஞ்ஞானம்; அது தோற்காது! என இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios