திராவிட மாடல் தயவு இல்லாவிட்டால் நோட்டா கூட தாண்ட முடியாது! ஞாபகம் இருக்கட்டும்! வெகுண்டெழுந்த கி.வீரமணி.!
தமிழ்நாட்டில் நடைபெறுவது கவர்னர் ஆட்சி அல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி; அதனையே மறந்துவிட்டு, ‘தனிக்காட்டு ராஜாவாகத்’ தன்னைக் கற்பித்துக்கொண்டு, இப்படி அறியாமை நிறைந்த பல அபத்த விளக்கங்களைத் தர முன்வருகிறார் இந்த ஆளுநர் ரவி.
‘திராவிட மாடல்’ என்பது பிரிவினைவாதம் என்றால், ‘குஜராத் மாடல்’ என்பது என்ன வாதம்? ஆளுநருக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்து கி.வீரமணி காட்டமாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஆங்கில நாளேடான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’விற்கு நேற்று முன்தினம் (3.5.2023) விரிவான பேட்டி ஒன்றைத் தந்து, தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசோடும், அவ்வரசைத் தேர்வு செய்த தமிழ்நாட்டு மக்களோடும், கூட்டணி கட்சியினரோடும் வீண் வம்புச் சண்டை, தேவையற்ற சர்ச்சையை உருவாக்கிடும் வேறு ஏதோ திட்டத்தின் அடிப்படையிலே இப்படி தனது எல்லை தாண்டி - விஷமக் கருத்துகளை விதைத்திருக்கிறார்! அவரது அரசமைப்புச் சட்டப் பொறுப்பு மீறிய அந்தப் பேட்டி ஒரு கானல் நீர் வேட்டை, உண்மைக்கு மாறானது என்பது மட்டுமல்ல; அவரது அதிகார எல்லை தாண்டிய அதிகப்பிரசங்கித்தனமும், அறியாமையும், ஆணவமும் கலந்தவையாகவும் இருக்கின்றன.
ஆளுநரை நோக்கி சில கேள்விகள்
அவற்றிற்குப் பதில் அளிக்கும்முன் ஓர் அரசமைப்புச் சட்ட உணர்வாளன் என்ற முறையில் ஒரு சில கேள்விகளை முன்வைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்!
1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறுகளின்படி ஒரு மாநில ஆளுநர் என்பவருக்கு தனித்த முறையில் சட்டமன்றத்தில் உரையாற்ற, கருத்துக் கூற இடம் - விதி உண்டா?
2. சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றும் உரை என்பதை அவரோ, அவரது பணிமனையோ தயாரிக்கிறதா?
அதைத் தயாரிப்பது அமைச்சரவை அல்லவா? மாநில ஆட்சியின் முகப்பாக - தோற்றமாக அவர் இருந்தாலும், கொள்கை முடிவுகளை - தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை உருவாக்குமா? ஆளுநருக்கு அதனைச் செய்ய இடம் உண்டா? அமைச்சரவை தயாரிக்கும் உரையில் அவருக்குத் தனிப்பட்ட மறுப்புகளோ, அய்யங்களோ இருப்பின் அதனை முறையான வழியில் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளத்தான் முடியுமே தவிர, அமைச்சரவை தயாரித்துத் தரும் அரசின் கொள்கை விளக்க உரையில் சிலவற்றைத் தவிர்க்கவோ, சேர்த்துப் படிக்கவோ அவருக்கு உரிமை உண்டா?
அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது என்பதிலிருந்து அவர் மாறுபட்டால் அதற்குரிய தனி விளக்கத்தை சட்டமன்றத் தலைவர் மூலமாகவோ அல்லது அதிகாரிகள் மூலமாகவோ தான் அவர் பெற்றிருக்க வேண்டுமே தவிர, ‘‘வெற்று விளம்பரப் பிரச்சார (Propaganda) உரையாக அது இருந்தது. அதனால் அந்தப் பகுதியை நான் தவிர்த்தேன்’’ என்று கூறுவதற்கு அவருக்கு என்ன உரிமை? அதற்கு நேர்மாறான தகவல்களை ஒரு தனிப் பேட்டியில் கூறுவதற்கு மரபோ, அரசமைப்புச் சட்டமோ, அவர் எடுத்த ரகசிய காப்புப் பிரமாணமோ அவருக்கு இடம் தந்துள்ளதா? கொள்கை முடிவுகள் என்று ஓர் அரசு கூறுமேயானால், அதனை நீதிமன்றங்கள்கூட மறுப்பதில்லையே! அதைப் பிரச்சாரம் என்று சொல்வதற்கு இவருக்கு என்ன தகுதியும், உரிமையும் இருக்கிறது?
ஓர் அரசுக்கு அதன் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் உரிமை இல்லையா? அதற்குத்தானே இவரது உரை! உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் அவரது ஆளுமை - அதிகாரம் என்பது வானளாவிய அதிகாரமோ அல்லது ஓர் எதிர்க்கட்சி தலைவர் போல் விமர்சிப்பதற்கோ, வெளிநடப்பு செய்வதற்கோ, மரபுகளை சிதைப்பதற்கோ அரசமைப்புச் சட்ட உரிமைகளைத் திசை திருப்பவுதற்கோ, தனியே ஆட்சிபற்றி, அதுவும் அதன் மூல இலட்சியங்கள்பற்றியே கேலி கிண்டல் அரைவேக்காட்டுத்தன விமர்சனங்களைப் பேட்டிமூலம் தருவதற்கோ அவருக்கு அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு இடம் அளிக்கிறது? நடப்பது ஆளுநர் ஆட்சியல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி!
தமிழ்நாட்டில் நடைபெறுவது கவர்னர் ஆட்சி அல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி; அதனையே மறந்துவிட்டு, ‘தனிக்காட்டு ராஜாவாகத்’ தன்னைக் கற்பித்துக்கொண்டு, இப்படி அறியாமை நிறைந்த பல அபத்த விளக்கங்களைத் தர முன்வருகிறார் இந்த ஆளுநர் ரவி.
எடுத்துக்காட்டாக ஒன்று; அவரது பேட்டியில், ‘‘‘திராவிட மாடல்’ அரசு எனக் குறிப்பிட்டிருந்தனர்; அதை நான் கூறவில்லை; ‘திராவிட மாடல்’ அரசு என்று எதுவும் கிடையாது; ‘திராவிட மாடல்’ என்பது அரசியல் கோஷம் மட்டுமே!
‘திராவிட மாடல்’ கொள்கை எப்போதோ காலாவதியாகிவிட்டது. அதற்கு மீண்டும் உயிர்க் கொடுக்க நினைக்கின்றனர்!’’ என்று கூறுகின்றார்.
இந்த அறியாமை வழியும் அபத்தக் கருத்துக்கு நாம் பதில் சொல்வதைவிட, ‘திராவிட மாடல்’ - The Dravidian Model என்று பொருளாதார அரசியல் ஆய்வாளர்கள் தந்த தலைப்புப் புத்தகத்தையாவது அவர் படிப்பது - அவரது அறிவுச் சூன்யத்திற்குப் போடும் அருமருந்தாக அமையக் கூடும்!
‘திராவிட மாடல்’ என்றால் பிரிவினைவாதமாம்! நாம் கேட்கிறோம்!
‘குஜராத் மாடல்’ என்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதுதானே!
‘குஜராத் மாடல்’ என்று அழைக்கிறீர்களே, அது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான பிரிவினைவாதமா?
அந்தந்தக் கொள்கை அடிப்படையின்படிதான் தனித்துவ வளர்ச்சி, அரசியல், சமூக, பண்பாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு வளருவது என்பதை அந்நூல் ஆய்வாளர்கள் விளக்கியிருக்கிறார்களே!
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று ஒன்றிய அரசின் கல்வித் துறை அமைச்சர் பாராட்டினார்களே, அதற்கு எது அடிப்படை என்பதையாவது புரிந்துகொள்ள வேண்டாமா?
‘‘கீழ்ஜாதிக்காரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே - அறிவைக் கொடுக்காதே’’ என்று தடுத்த சனாதன மனுதர்மத்தினைப் புறந்தள்ளி, ‘‘அனைவருக்கும் கல்வி, அதிலும் உரிமை மறுக்கப்பட்ட மக்களான ஒடுக்கப்பட்டோர், மகளிர் இவர்களுக்குக் கல்வியில் முன்னுரிமை’’ என்பதே ‘திராவிட மாடல்’ ஆட்சி!
‘திராவிட மாடல்’ ஆட்சியின் தொடக்கம்
1920 நீதிக்கட்சி!
அதனால்தான் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சி அன்றைய நீதிக்கட்சி - திராவிடர் ஆட்சித் தொடக்கமாகிய 1920 ஆம் ஆண்டுமுதல் ஒரு நூற்றாண்டு அமைதிப் புரட்சியால் இன்று வளர்ந்தோங்கி ‘திராவிட மாடல்’ ஆட்சி மற்றவர்கட்கு வழிகாட்டும் எடுத்துக்காட்டான ஓர் ஆட்சி என்ற சிறப்புடன் இங்கே கம்பீரமாக நடைபோடுகிறது!
‘அனைவருக்கும் அனைத்தும்‘ என்பதே ‘திராவிட மாடல்!’ அது ‘இன்னாருக்கு மட்டுமே, இது’ என்று கல்வி, வேலை வாய்ப்பை மறுக்கும் சனாதன பத்தாம்பசலித்தனத்திற்கான ஆப்பு. இதனால் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டு, ஊர்தோறும் பள்ளி, உணவளித்தும் குழந்தைகளைக் கற்கச் செய்தல், அடுப்பூதிட ஆணையிட்ட பெண்களை அதிகல்வியாளர்களாக்கி அவனியில் பவனிவரச் செய்ததும் ‘திராவிட மாடல்’ ஆட்சி! சனாதன குஜராத் மாடலில் மனுதர்மமே பாடத் திட்டம்!
‘திராவிட மாடலில்’ சமதர்மம்; கல்வியில் நுகரப்படச் செய்யும் நுண்ணறிவு!
இது எப்படி காலாவதியாகும் ரவி அவர்களே? மாநிலங்களவையில் அண்ணா முழங்கினாரே! 1962 இல் அறிஞர் அண்ணா, மாநிலங்களவையில் முழங்கினார் - ‘‘நான் திராவிடப் பரம்பரையில் வருபவன்’’ என்று. அந்த உரையில் நாங்கள் மற்றவர்களை இழிவாகப் பார்த்தவர்கள் கிடையாது என்று தெளிவுபடுத்தினரே - அந்தப் பழைய பிரகடனம். அதற்குமுன் 1920 ஆம் ஆண்டிற்கு முன்பே ‘‘நாங்கள் திராவிடர்கள் - சமத்துவப் பண்பாளர்கள்’’ என்று முழங்கினார் ‘திராவிட லெனின்’ டி.எம்.நாயர் - அந்த வரலாற்றை நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம், வரத் தயாரா?
நீதிக்கட்சியின் தமிழ்நாளேட்டிற்குப் பெயர் ‘திராவிடன்’ என்பதை ஆளுநர் அறிவாரா?
1967 இல் அறிஞர் அண்ணாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர், ‘‘கட்சி தொடங்கி 10 ஆண்டுகள்; இரண்டே தேர்தல்கள் தாண்டி ஆட்சியைப் பிடித்துவிட்டீர்களே’’ என்பதற்கு அடக்கத்தோடு அறிஞர் அண்ணா சொன்னார், ‘‘இல்லை; எனது பாட்டன் நீதிக்கட்சி; அதன் நீட்சியே எமது இந்த ஆட்சி’’ என்றாரே, இந்தப் பின்னணிதான் ‘திராவிட மாடலின்’ அஸ்திவாரம், அடிக்கட்டுமானம்.
‘திராவிட மாடல்’ தயவு இல்லாவிட்டால்...?
50 ஆண்டுகளாக ‘திராவிடம்‘ இங்கு கொடிகட்டிப் பறக்கிறது. இன்னமும் அக்கட்சிகளின் தோள்கள்தானே மத்தியில் ஆளும் அகில இந்தியக் கட்சிகளுக்குத் தேவைப்படுகிறது தங்களது உயரம் காட்ட! ‘திராவிட மாடல்’ தயவில்லாவிட்டால், கட்டிய ஜாமீன் தொகையையும் பெற முடியாது; ‘நோட்டா’வையும் தாண்ட முடியாது, நினைவிருக்கட்டும்! மற்றவை நாளை தொடரும்! என கி.வீரமணி கூறியுள்ளார்.