தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதுமையான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


“தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை. வேலைவாய்ப்புகளை பெருக்க திட்டங்களோ புதிய தொழிற்சாலைகளுக்கான அறிவிப்புகளோ இல்லை. காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்ததைத் தவிர, அதற்கான நிதி ஒதுக்கீடுகளோ, அதுகுறித்த குறிப்புகளோ நிதிநிலை அறிக்கையில் இல்லை. இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை கண்துடைப்பு அறிவிப்புகள்தான் அதிகம். அரசின் நிதிநிலையைப் பார்க்கும்போது, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2019-20 ஆம் ஆண்டில் ரூபாய் 17 லட்சத்து 26 ஆயிரத்து 681 கோடியாகவும், கடன் ரூபாய் 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடியாகவும் இருந்தது.

தற்போது, நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ தமிழக அரசின் நிதி நிலைமை குறிப்பாக, கடன் சுமையின் காரணமாகவும், அதற்காக செலுத்தப்படுகிற வட்டியினாலும் வளர்ச்சித் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை என்பதை நிதிநிலை அறிக்கையில் காண முடிகிறது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சியை ஏற்படுத்துவதையோ, வேலைவாய்ப்பை பெருக்குவதையோ, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையோ நோக்கமாகக் கொண்டு அமையாத நிலையில் அதிமுகவின் இறுதி பட்ஜெட் மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது” என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.