திமுகவையா விமர்சனம் பண்றீங்க கமல் ? உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் !! பக்காவா பல்டி அடித்த கே.எஸ்.அழகிரி !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 11, Feb 2019, 7:02 AM IST
k.s.alagiri condumn kamal
Highlights

திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணைய வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலினின் கடும் எதிர்ப்பால் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2-ம் தேதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த 8-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பெற்றுக் கொண்டார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். கமல் தொடர்ந்து அதிமுக, திமுக கட்சிகளை ஊழல் கட்சிகள் என விமர்சித்து வந்த நிலையில் கே.எஸ்.அழகிரியின் அழைப்பு திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே குழப்பத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இதனிடையே திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். ஊழல் பொதியை நாங்கள் சுமக்க முடியாது.  மக்கள் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்தார். அதற்குப் பதிலடியாக, வெற்றிடம் என நம்பி வந்தவர் விரக்தியில் பேசுகிறார்' என திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் விமர்சித்தார்.

இந்நிலையில் அவசியமில்லாமல் திமுகவை கமல் விமர்சித்தது கண்டனத்துக்குரியது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதச்சார்பற்ற கொள்கைக்கு ஆதரவாளராக, சனாதன எதிர்ப்பாளராக, இடதுசாரி சிந்தனையாளராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் பாஜக, அதிமுக மீதான எதிர்ப்பு வாக்குகள் சிதறக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என்று கருத்து கூறினேன்.  அந்தக் கருத்தை நான் கூறும்போது, திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது என் கவனத்திற்கு வரவில்லை.

கமல்ஹாசன் இத்தகைய விமர்சனம் செய்திருப்பது தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு உதவுமே தவிர, அவர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட எந்த கொள்கைகளுக்கும் உதவாது. அவர் அவசியமில்லாமல்,தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்ப்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும்  என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

loader