இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவையில் சர்ச்சைக்குரிய மூன்று விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் அகாலி தளத்தைச் சேர்ந்த உணவுத்துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜுன் 5 ம் தேதி விவசாயத் துறை தொடர்பான 3 அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஹரியானா மாநிலத்தில் கடந்த 10 ஆம் தேதி பாரதிய கிஷான் சங்கத்தின் சார்பாக மாபெரும் போராட்டம் நடந்தது. இதனையடுத்து பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் கடந்த 14 ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் மத்திய அரசின் 3 அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன.
நாடு முழுவதும் மூன்று அவசர சட்டங்களை விவசாயிகள் எதிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. விவசாயம் தொடர்பான 3 அவசரச் சட்டங்களால் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் விவசாயிகள் செல்லக்கூடிய அபாயம் உள்ளது. சட்டக் கட்டுப்பாடு, சந்தை சுதந்திரம், இறக்குமதி-ஏற்றுமதி ஆகியவை விவசாயிகளின் நலன் சார்ந்தவைகளாக இருக்காது. உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளால் ஏற்கனவே இந்திய விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


விவசாய உற்பத்தி மற்றும் மார்க்கெட் கமிட்டியை சார்ந்துள்ள விவசாயிகள், மத்திய அரசின் 3 அவசரச் சட்டங்களால் கோபம் அடைந்துள்ளனர். புதிய முறை அமல்படுத்தப்பட்டால், குறைந்தபட்ச விலை நிர்ணய முறை முடிவுக்கு வரும். இது குறித்து அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், குறைந்தபட்ச விலை நிர்ணயத்தின் அடிப்படையிலான கொள்முதல் முறை ரத்து செய்யப்படும். உயர்மட்டக் கமிட்டியின் பரிந்துரையின்படி இத்தகைய அவசரச் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துவதில் உள்நோக்கம் இருப்பதாக விவசாய சங்கத் தலைவர்கள் நம்புகின்றனர். இந்த அவசரச் சட்டங்களால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மண்டிகளில் மட்டும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். அதோடு, மண்டிகளில் இருந்து மாநில அரசுகளுக்குக் கிடைக்கும் வருவாயும் பாதிக்கும்.


கடந்த 2014 தேர்தலின்போது விவசாயிகளின் விலை பொருளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி நியாயமான விலை வழங்கப்படும், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன் என்று வாக்குறுதி கொடுத்து மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தற்கொலை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நிலையில் மூன்று அவசர சட்டங்களை பிறப்பித்ததால் நாடு முழுவதும் விவசாயிகள் பாஜக ஆட்சியை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
எனவே, விவசாயிகளுக்கு விரோதமான மூன்று அவசர சட்டங்களையும், மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.