திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பாக பொருளாதார சரிவுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய கே.எஸ்.அழகிரி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்தது மட்டுமின்றி குடும்பத்தையும் பிரித்து கொல்லைப்புறம் வழியாக ஆட்சியமைத்திருப்பதாக அழகிரி கூறினார். இந்த செயல் ராஜதந்திரம் இல்லை என்றும் பிக்பாக்கெட் அடித்ததற்கு தான் சமம் என்றார். தமிழகத்தில் அதிமுகவும் இதுபோன்ற சர்வாதிகாரத்தின் அடிப்படையில் தான் மறைமுக தேர்தலை திணிக்க பார்ப்பதாக குற்றம் சாற்றினார். அதிமுக என்கிற முகமூடியை பயன்படுத்தி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கொண்டு வர முயற்சிப்பதாகவும் ஆனால் அது முடியாது என்றார்.

இந்தியாவின் பொருளாதாரமும் அந்நிய முதலீடும் சரிந்து விட்டதாக கூறிய கே.எஸ்.அழகிரி, இதை பல்வேறு பொருளாதார நிருபர்களும் கூறியிருப்பதாக தெரிவித்தார். விவசாயம் மங்கி, வேலைவாய்ப்பின்மை பெருகி மோடி அரசு அதள பாதாளத்திற்கு செல்வதாகவும், அதை மறைப்பதற்காகவே காஷ்மீர் பிரச்சனை, அயோத்தி பிரச்சனை என மத்திய அரசு திசை திருப்பி வருவதாக தெரிவித்தார்.