Ramanujam is a leader of Jayalalithas Special Army
கேட்டது நீதி... கிடைத்தது சிறை: கந்தக பூமியில் வெந்து மீண்ட நாட்கள் எனும் தலைப்பில் பழைய கதையை சொல்லிவரும் ராமதாஸ் 7. கே. இராமானுஜம் எனும் ஜெயலலிதாவின் ஏவல்படைத் தலைவர்! எனும் தலைப்பில் இன்று ஒரு சம்பவத்தை விளக்கிக் கூறியுள்ளார்.
இதில், வரலாறு நமக்கு சொல்லித்தரும் பாடம் என்பது சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள், சதிகாரர்கள் ஆகியோரை விட அவர்களின் ஏவலாட்கள் மிகவும் கொடியவர்களாக இருந்திருக்கின்றனர். ஹிட்லரின் இரண்டாம் நிலை தளபதி ஜோசப் மெங்கேலே, இடி அமீனின் தளபதி ஐசக் மலியமுங்கு, இராஜபக்சேவின் படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தங்களின் தலைவனைவிட மிகவும் கொடியவர்களாகவே இருந்தனர். எதிரியை வெட்டிக் கொல்ல வேண்டும் என்று தலைவன் ஆனையிட்டால், எதிரியை கொன்று ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பது சில தளபதிகளின் வழக்கம். இந்த வரிசையில் தமிழகத்தின் கொடுங்கோலராக திகழ்ந்த ஜெயலலிதாவின் தளபதியாக விளங்கியவர் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் கே.இராமானுஜம்.
கூனி, சகுனி, கே.ராமானுஜம்
இராமாயணத்தில் கூனி, மகாபாரதத்தில் சகுனி போன்று பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட அத்தியாயத்தின் வில்லன் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் கே.இராமானுஜம் தான். கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்று தம்மைப் பற்றி ஒரு தோற்றத்தை திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்ட இராமானுஜம் அழுக்கு நிறைந்த இதயத்துக்கு சொந்தக்காரர். பாட்டாளி மக்கள் கட்சி மீதும், வன்னியர்கள் மீதும் இனம் புரியாத வன்மத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர் அவர்களை பழிவாங்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். இதே தருணத்திற்காகத் தான் ஜெயலலிதாவும் காத்திருந்தார். மான்களை வேட்டையாடுவதை நோக்கமாகக் கொண்ட குள்ளநரியும், ஓநாயும் ஒன்று சேர்ந்தது போல பாட்டாளிகளை வேட்டையாட ராமானுஜமும், ஜெயலலிதாவும் ஒன்று சேர்ந்தனர்.
ஜெயலலிதா காலால் இட்ட வேலைகளை ராமானுஜம் தலையால் செய்து முடித்ததற்கு காரணம் இருந்தது. 2011&ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா, அதுவரை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த இராமானுஜத்தை உளவுத்துறை தலைமை இயக்குனராக நியமித்தார். அதுமட்டுமின்றி, சட்டம் &ஒழுங்கு பிரிவின் தலைமை இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக வழங்கினார். 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவர் ஓய்வுபெறுவதற்கு 3 வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில் அவரை நிரந்தர தலைமை இயக்குனராக நியமித்து இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பும் வழங்கினார். அதற்கு நன்றிக் கடனாகத் தான் ஜெயலலிதாவுக்கு அவ்வளவு விசுவாசமாக நடந்து கொண்டார்.
குண்டர் சட்ட கைதுகள்
ஜெயலலிதாவின் பழிவாங்கும் மனநிலையை புரிந்து கொண்ட இராமானுஜம் தமக்கு கீழ் பணியாற்றிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோரை நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; எவ்வளவு பேரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்; எவ்வளவு பேரை சாதாரண வழக்குகளில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில் தான் 12,000 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். 134 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
10 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஆணையிட்டால் 25 பேரௌ குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பார் ராமானுஜம். ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகளை கேள்விப்பட்டிருப்போம். ஜெயலலிதாவை மிஞ்சிய ஜெயலலிதா விசுவாசியும், ஜெயலலிதாவை மிஞ்சிய கொடுங்கோலரும் இராமானுஜம் தான்.
காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொள்வது இயல்பு தான் என்றாலும் கூட அவர்களும் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் அல்லவா? ஆனால், இராமானுஜம் காக்கிச் சட்டை போட்ட தாதாவைப் போல மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தார். ஜெயலலிதாவை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 135 பேரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கச் செய்தார் இராமானுஜம்.
மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல்
அதுமட்டுமின்றி, இந்திய தண்டனைச் சட்டப்படி, ஒருவர் எவ்வளவு கடுமையான குற்றங்களைச் செய்திருந்தாலும், அவரால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனும்போது, அவர்களைத் தடுப்புக் காவல் சட்டத்தின்படி கைது செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. மிகக்கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களுக்கே இத்தகைய அளவுகோல்களைக் கடைபிடிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், எந்தக் குற்றத்தையுமே செய்யாத அப்பாவி பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, குண்டர் சட்டத்திலும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்து சிறையில் அடைத்தது மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் ஆகும்.
இந்தியாவில் பயங்கரவாதம் தலைவிரித்தாடும் காஷ்மீர் மாநிலத்தில் கூட ஒரே மாதத்தில், ஒரே கட்சியைச் சேர்ந்த 134 பேர் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ச்சப்பட்டதில்லை. ஆனால், தமிழகத்தில் எந்தக் குற்றமும் இழைக்காத 134 பேர் பேர் மீது தடுப்புக் காவல் சட்டம் பாய்ச்சப்பட்டதில் இருந்தே பா.ம.க. மீது எந்த அளவுக்கு பழிவாங்கும் உணர்வுடன் ஜெயலலிதா இருந்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
பாண்டியன் தற்கொலை
தடுப்புக்காவல் சட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் முடுக்கிவிடப்பட்ட நிலையில், மறுபுறம் நீதி கேட்டு போராடியதற்காக நானும், மருத்துவர் அன்புமணி இராமதாசும் கைது செய்யப்பட்டதை அறிந்து மனம் உடைந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற இளைஞர் 04.05.2013 அன்று இரவு தீக்குளித்தார். சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி அடுத்த நாள் மாலை காலமானார். அவரது மறைவு செய்தி பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உயிர்த்தியாகம் செய்த பாண்டியனின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் கீழ் செட்டிப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. எனது உத்தரவின் பேரில் அவரது இறுதிச் சடங்கில் பா.ம.க.வின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இராமானுஜத்திற்கு பரிசுகள்
இராமானுஜத்தின் இந்த துரோகப்பணிக்கு பரிசாக அவர் ஓய்வு பெற்றவுடன் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன்பின் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றார். 60 வயதில் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய இராமானுஜத்தின் அரசுப்பணி 65 வயது வரை நீடித்தது. காவல்துறை தலைமை இயக்குனர் என்ற முறையில் ஒரே ஒரு ஓய்வூதியம் பெற வேண்டிய இராமானுஜம் இப்போது 3 ஓய்வூதியங்களைப் பெற்று வசதியாக வாழ்கிறார். இது பாட்டாளி மக்கள் கட்சியினரை கொடுமைப்படுத்தியதற்கு ஜெயலலிதா வழங்கிய பரிசு ஆகும்.
அடுத்தவர் பெயர் எழுதப்பட்ட அரிசியை நாம் பறித்து உண்பதே பெரும் பாவம் எனும் போது அடுத்தவர் ரத்தத்தை உறிஞ்சி தமது உடலை வளர்ப்பது எவ்வளவு பெரிய பாவம்? அந்த பாவத்தை தான் கொடுங்கோலர் ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஏவலாளி இராமானுஜம் செய்திருக்கிறார். மொத்தத்தில் ஒரு காவல்துறை அதிகாரி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் இராமானுஜம் ஆவார்.
விடுதலையும், உயிர்ப்போராட்டமும்!
நாளையுடன் நிறைவு செய்கிறேன்.
