நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின. 

இதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டினார்கள்.மேலும் கோடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர்.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை  முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். இந்த நிலையில்,  கோடநாடு விவகாரம் தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது கோடநாடு  கொலை கொள்ளை வீடியோ விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக்கோரி மனு அளித்தார்.

இந்த நிலையில் அதிமுக  துணை அமைப்பாளர்கள்  கே.பி.முனுசாமி, \வைத்தியலிங்கம் எம். பி, ஜெயவர்தன் எம்.பி. மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று  சென்னையில் கிண்டியில் உள்ள கவர்னர்  மாளிகையில் கவர்னர்  பன்வாரிலாலை சந்தித்தனர்.

அப்போது கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பில்லை என்ற எடுத்துக் கூறினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ஒருவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை, அபாண்டமான கொலைக் குற்றச்சாட்டுகளைக் கூறினால் அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் புகார் கூறியவருக்கு ஏழு வருட சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்பதையும் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறேன் என தெரிவித்தார்.