Asianet News TamilAsianet News Tamil

களத்தில் குதிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு! அரசியலுக்கு அச்சாரமிடும் கே.பாக்யராஜ்!

K. Bhagyaraj pressmeet
K. Bhagyaraj pressmeet
Author
First Published Jan 8, 2018, 3:26 PM IST


அரசியல் குறித்து முடிவெடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டதாகவும், இன்னும் ஒரு மாத காலத்துக்குள் முடிவை சொல்லுவதாகவும், இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மரணம், வயது முதிர்வு காரணமாக கருணாநிதியின் தற்காலிக ஓய்வு ஆகியவற்றால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் பல்வேறு குழப்பங்களும், நிலைப்பாடுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டு, நடத்தப்பட்ட தேர்தலில், டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த மாதம் 31 ஆம் தேதி அறிவித்தார். இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறி வருகிறார். நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று
கூறப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் ஒரு மாதத்திற்குள் தனது முடிவை சொல்லுவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில், எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்தபோது, கே.பாக்யராஜ், தமிழக முழுவதும் சென்று அதிமுகவுக்காக பிரசாரம் செய்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, ஜானகி அணிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சில காலத்துக்குப் பிறகு அவரே தனிக்கட்சி தொடங்கினார். இதன் பின்பு திமுகவில் சேர்ந்து, அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நான் அரசியலுக்கு நேரடியாக வர முடிவு செய்து விட்டதாக, மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், அரசியலுக்கு நேரடியாக வரக்கூடிய வாய்ப்பும், காலமும் நெருங்கிவிட்டது. அந்த சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும், தற்போது எதுவும் சொல்ல முடியாது என்றார். அதற்கு கொஞ்சம் அவகாசமும் தேவை என்று கூறினார்.

அரசியல் குறித்து முடிவெடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டதாக தான் நினைப்பதாகவும், அதற்கான காலம் நீண்டகாலம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் என்றும் கூறினார். இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிவை சொல்லுவேன் என்றும், யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று பாக்கியராஜ் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios