பெரியாரின் பணி இன்றும் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து சனாதன சக்திகளை எதிர்க்க வேண்டும் என தெரிவித்தார். பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு இருப்பது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டம் நியாயமானது. 

தமிழ் நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்று பாஜக பேசுவது கசாப்புக் கடைக்காரன் ' ஜீவகாருண்யம் ' பேசுவது போல உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதற்கு பாஜகவுக்கும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் எந்த தகுதி இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு விமர்சனங்கள் அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் தலித் மக்கள் உரிமையை பறிக்கும் விதமாக அரசு சட்டங்களை கொண்டு வருகிறது என்றும், விவசாயிகளுக்கு எதிராகவும் அரசு செயல்படுகிறது என்றும் கடுமையான விமர்சனங்கள் இருந்து வருகிறது. பணமதிப்பிழப்பு விவகாரம் பெருமளவில் விமர்சனத்திற்கு உள்ளானது. மோடி பதவி ஏற்றது முதல் இந்தியாவின் பொருளாதாரம் மிகமோசமான வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதேபோல் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதனால் வறுமையால் நாடு மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது என்ற விமர்சனமும் இருந்துவருகிறது.

கிளீன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, வறுமை ஒழிப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது என்று பாஜக தொண்டர்கள் மோடியை கொண்டாடி வருகின்றனர். இதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரையில் இயல்பாகவே சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கும், திமுகவுக்கும் மோதல் இருந்து வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவே எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். எனவே திமுக அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களையும், நடவடிக்கைகளையும் பாஜகவினர் விமர்சித்தும், பேசியும் வருகின்றனர். இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் கருத்து கூறி வரும் யூடியூப்பர் மாரி தாஸ் என்பவரை போலீசார் கைது செய்து தற்போது அவருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கைது பாஜகவினரை கொந்தளிப்படைய செய்ததுடன் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் அறவே இல்லை,

அரசை எதிர்த்துப் பேசினால் உடனே கைது நடவடிக்கை பாய்கிறது, இது சர்வாதாகாரம் என்றும், இனி பாஜகவினர் மீது கைவைத்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என அண்ணாமலை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதற்கு பாஜகவுக்கோ அண்ணாமலைக்கோ எந்த தகுதியும் இல்லை என விமர்சித்துள்ளார். தந்தை பெரியாரின் 48 நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் திடலில் பல்வேறு அரசியல் கட்சிகள் அஞ்சலி செலுத்தின அந்த வரிசையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்கள் பேசிய அவர், பெரியாரின் பணி இன்றும் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து சனாதன சக்திகளை எதிர்க்க வேண்டும் என தெரிவித்தார். 

பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு இருப்பது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டம் நியாயமானது. அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியும், தொழிற்சங்கமும் ஆதரவு தெரிவிக்கிறது. இந்தியாவில் மோடி அரசாங்கம், கட்டுப்பாடில்லாத உரிமைகளை வழங்கியுள்ளது. அதுபோலவே ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் 15ஆயிரம் பெண்கள் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக இருந்துள்ளனர். அவர்களது போராட்டங்களுக்கு துணை நிற்பதுடன், முன்னணியிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிற்கும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களில் 60% தொழிலாளர்கள் ஒப்பந்தத்திலேயே இருக்கின்றனர். 

கார்ப்ரேட்களின் எடுபுடியாக இருக்கும் மோடி அரசு இதை அனுமதித்துள்ளது என்றார். தமிழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு இடமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து பேசிய பாலகிருஷ்ணன், கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேச தகுதியில்லாத கட்சி பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசமுடியாத நிலை இருக்கிறது. தொழிலாளர்கள் உரிமைகளுக்கு எதிரான சட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமலும் திருத்தங்களை கேட்காமலும் சட்டம் இயற்றி வரும் பாஜக, கருத்து சுதந்திரம் குறித்து பேசுவது கசாப்புக் கடைக்காரன் ஜீவகாருண்யம் பேசுவது போல் உள்ளது என்றார்.