துணை வேந்தர் நியமன முறைகேட்டை தடுக்காதது ஏன்..? ஆளுநருக்கும் தொடர்பா.? கே.பாலகிருஷ்ணன் கேள்வி
தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை தற்போது பகிரங்கமாக தெரிவித்துள்ள பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோது அதை ஏன் தடுக்காமல் அமைதி காத்தார் எனும் கேள்வியும் இயல்பாக எழுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
துணை வேந்தர் பதவியிடங்கள்
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரி லால் புரோகித், தமிழகத்தில் ஆளுநராக பணியாற்றி உள்ளேன். அங்கு நிலைமை மிகவும் மோசம். தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் பதவி ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. நான் தமிழக ஆளுநராக இருந்தபோது சட்ட விதிகளின்படி 27 துணை வேந்தர்களை நியமனம் செய்தேன் என்று அவர் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுப்பு தெரிவித்துள்ளார். துணை வேந்தர் நியமனம் முழுக்க, முழுக்க ஆளுநரை சார்ந்தது என்பதால் அதில் தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் அதற்கு அவரே முழு பொறுப்பு. இந்த பதவிக்காக பணம் கைமாறியிருந்தாலும் அது ஆளுநரையே சாரும் என கூறியிருந்தார்.
தடுக்க தவறியது ஏன்..?
இந்த நிலையில் முன்னாள் ஆளுநர் பன்வாரி லால் புரோகித் கருத்து தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்றைய பஞ்சாப் ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றிய காலத்தில் (அன்றைய அதிமுக ஆட்சியில்) தமிழ்நாட்டில் உள்ள பல்கலை கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களில் பெருமளவிலான முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்
இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை தற்போது பகிரங்கமாக தெரிவித்துள்ள பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோது அதை ஏன் தடுக்காமல் அமைதி காத்தார் எனும் கேள்வியும் இயல்பாக எழுகிறது.எனவே, ஆளுநரும் முறைகேட்டிற்கு அப்பாற்பட்டவரல்ல என்றே கருத வேண்டியுள்ளது. அன்றைய அதிமுக அரசில் லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர் உள்ளிட்ட பணி நியமனங்களை மேற்கொண்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது என பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
துரோகிகள் ரகசியமாக தான் சந்திப்பார்கள்..! ஓபிஎஸ்சை மீண்டும் சீண்டிய ஆர்.பி.உதயகுமார்