சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் கேள்விகள் கேட்டால் அதற்கு தகுந்த பதிலை சொல்ல வேண்டும். ஆனால் அதை மறந்து சும்மாவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்திருப்பதாக  சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன் நக்கல் அடித்துள்ளார்.  

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அமைச்சர்கள் யாரும் வாய் திறக்கமாட்டார்கள். வெளியில் பேட்டி கூட கொடுக்க மாட்டார்கள். ஜெயலலிதாவை அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரையும்  தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.

சட்டப்பேரவைக்கு சென்றால் கூட அமைச்சர்களை பேச விடாமல் எதிர்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் தானே பதிலளித்து திறம்பட வாதிடுவார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரின் செயல்பாடுகள் அனைத்தும் மத்திய அரசுக்கு ஒத்து ஊதுவதாகவே அமைவதால் எதிர்கட்சிகள் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அப்போது, தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் எந்த கேள்விகளுக்கும் பதிலளிப்பதில்லை எனவும், எந்த கேள்வி கேட்டாலும் சும்மாவே அமர்ந்திருக்கிறார் எனவும் நக்கல் அடித்தார்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது அனைத்து கருத்துக்களுக்கும் பதில் சொல்வார். திறம்பட கையாள்வார். ஆனால் எடப்பாடி கேள்வி கேட்டால் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற சொல்கிறார். ஒரு மணி நேரத்தில் 45 நிமிடம் அவர்கள் தான் பேசுவார்கள் ஆனால் என்ன பேசுகிறார்கள் என்றே புரியாது. கத்தி கொண்டு இருப்பார்கள் என தெரிவித்தார்.