காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை என சச்சின் பைலட் விவகாரம் குறித்து ஜோதிராதித்யா சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும் போட்டிகளுக்கு இடையே முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார். தனக்கு முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் சச்சின் பைலட் இருந்து வந்தார். இந்நலையில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்,ஏ.க்களுடன் பாஜகவில் இணைய டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சச்சின் பைலட் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்தவரும், சமீபத்தில் பாஜகவில் இணைந்தவருமான ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது டுவிட்டரில் பதிவில் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டால் ஓரங்கட்டப்பட்டு, துன்புறுத்தப்பட்டு உள்ளார். என்னைப்போல எனது சகாவும் துன்பப்படுவதை பார்க்க வருத்தமாக உள்ளது. காங்கிரசில் திறமைக்கு மதிப்பில்லை என்பதையே இது காட்டுகிறது என பதிவிட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரசை விட்டு விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்தார். அவருடன் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவியதால் கமல்நாத் அரசு கவிழ்ந்து பாஜக அரசு ஆட்சியமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.