இதுதொடர்பாக கிருஷ்ணசாமி எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் கொரோனா அபாயம் துவங்கிய நேரத்தில் தமிழகத்தில் 4-10 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு என்று பெருமகிழ்ச்சி கொண்டிருந்தோம். மார்ச் 24-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமலாயிற்று. ஊரடங்கு அமலாக்கப்பட்டாலும் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடியவர்கள் எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே இருந்தது. ஏறக்குறைய ஆறு வார காலத்திற்கு மேலாக முழு முடக்க காலத்திலேயே Tracing–Tracking-Testing-Treating என்று உலக அளவில் கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகள் அமலாக்க வேண்டும் என மருத்துவ உலகம் எடுத்துச் சொன்னதை, வலியுறுத்தி நான் உங்களுக்கு விரிவான கடிதம் எழுதியிருந்தேன்.


வீடுகள் தோறும் இலவசமாக முகக்கவசமும், கைகளை சுத்தம் செய்ய சோப்பு மற்றும் சானிடைசர் உள்ளடங்கிய பெட்டகங்களை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 1000 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தோம். மிக முக்கியத்துவம் வாய்ந்த எங்களின் இந்த ஆலோசனைகள் மீது அரசு ஏனோ கவனம் செலுத்தவில்லை.
சென்னையில் மட்டும் தினமும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி தினமும் 50-60 பேர் மரணம் எய்திய சூழலும் ஏற்பட்டது. இப்பொழுது சென்னையில் இருந்து கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கிராமம் வரையிலும் வேகமாக பரவி வருகிறது. தினமும் சராசரியாக 5,500-6000 பேர் கொரோனா தொற்றிற்கு ஆளாகி வருகிறார்கள். தினமும் 115 -120 பேர் மரணமெய்துகிறார்கள் என்ற செய்தி மிகவும் வருத்தத்தையும், கவலையையும் அளிக்கிறது. சாதாரண எளிய குடிமகன் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரையிலும் கொரோனா தொற்றிற்கு ஆளாகிறார்கள்.  ஒரு குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைவரும் 1-2 மாதத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழலுக்கும், அக்குடும்ப உறுப்பினர் எவரும் வேலைக்கு செல்ல முடியாத சூழலுக்கும் ஆளாகிறார்கள். 
இந்த வேகத்தில் கொரோனா பரவினால் அடுத்த இரண்டு, மூன்று மாதத்தில் பல இலட்சக்கணக்கானவர்கள் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய சூழல் உருவாகலாம். நூற்றுக்கணக்கானவர்கள் மாண்டு மடியவும் நேரிடும். மருத்துவமனைகளில் படுக்கைகள் எல்லாம் நிரம்பி வழியும் சூழல் கூட உருவாகலாம். சற்றும் எதிர்பாராத இந்த சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதுவரையிலும் லட்சக்கணக்கானவர்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. அதற்காக நான் பாராட்டுகிறேன். ஆனால், அதே சமயத்தில் கொரோனாவின் வேகத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுப்படுத்தவில்லை என்று சொன்னால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
இந்த கொரோனா தமிழகத்தில் நுழைந்தபோது மருத்துவர்களுக்குக் கூட அதனுடைய அறிகுறிகளும் போக்குகளும் புரியாமல் இருந்தது. இப்பொழுது கொரோனாவினுடைய அனைத்துத் தன்மைகளும் மருத்துவர்களுக்கு அத்துபடி ஆகிவிட்டது. ஆனால், இதை கட்டுப்படுத்துவதில்தான் பிரச்சனை இருக்கிறது. பெரும்பாலும் மிதமான காய்ச்சல் எனத் தொடங்கி இருமல், மூச்சுத் திணறல் என்று கொரோனா படிப்படியாகத் தீவிரமடைகிறது. மிதமான காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கின்ற பொழுதே கண்டறிந்து தனிமைப்படுத்துவது அல்லது சிகிச்சை அளிப்பது என்று முடிவெடுத்தாலே தமிழகத்தில் ஒரு மாதத்திற்குள் உயிரிழப்புகளை மிகப்பெரிய அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம். மிதமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறாமல், பல இடங்களில் சுற்றித் திரிவதும், அவர்கள் பலருக்கு இந்நோயை பரவி விடுவதும்தான் இந்த சமூக பரவலுக்கு காரணமாகிறது.
அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஒரு சில வாரங்களுக்குள் கரோனாவை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். எனவே தமிழ்நாடெங்கும் அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் ஒவ்வொரு வீதிகளிலும் தெருக்களிலும் ஒருசேர தொடர்ந்து ஒரு மாதத்திற்கு காய்ச்சலை கண்டறியும் முகாம்களை நடத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். அம்முகாம்களில் மிதமான காய்ச்ச்ல் இருக்கக்கூடியவர்களை கண்டறிவது (Tracing), பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டறிவது (Tracking), கோவிட் பரிசோதனையை மேற்கொள்வது (Testing), பிற மோசமான அறிகுறிகள் தென்படுபவர்களை மட்டும் மருத்துவமனையில் அனுமதிப்பதும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதும் (Treating) என வரைமுறைகளை உருவாக்கினால் பல உயிர்களை உரிய நேரத்தில் காப்பாற்றவும் முடியும், கொரோனாவை 100/100 சதவீதம் வெல்லவும் முடியும்.
எனவே, ஒரு சில மாதங்களுக்கு தமிழக அரசின் அவசியமான துறைகளை தவிர, மற்ற துறைகளின் ஊழியர்களை ஒருங்கிணைத்து அரசின் பிற துறை பணிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு ஒரு மாதத்திற்கு தெருக்கள் தோறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தி தமிழகத்திலிருந்து கொரோனாவை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கடிதத்தில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.