கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமாவை தொடர்ந்து, கர்நாடக அரசியலில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையில் நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு அரசு தயாராக இருப்பதாக சமீபத்தில் முதலமைச்சர்  குமாரசாமி, சட்டசபையில் அறிவித்தார். 

இதனையடுத்து நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தி இன்று மாலைக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்கும் படி முதலமைச்சர் குமாரசாமிக்கு, எதிர்கட்சி தலைவரான பாஜகவை சேர்ந்த எடியூரப்பா கெடு விதித்திருந்தார். இந்நிலையில் பா.ஜ.,வை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி காங்- மஜத கட்சிகள் கோரிக்கை வைத்தன.

இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் சபாநாயகரை சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி பா.ஜ., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால்  அவை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இதனையடுத்து சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் ரமேஷ் குமார் தலைமையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில், ஜூலை 18 ம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர்  குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.