Asianet News TamilAsianet News Tamil

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு... தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

judgment postponed without specifying a date in case against admk general secretary election
Author
First Published Mar 22, 2023, 6:46 PM IST

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தொடரப்பட்டது. இந்த 4 வழக்குகளும் பொறுப்பு தலைமை நீதிபதி குமரேஷ்பாபு முன்பு இன்று (22.02.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை முன்வைத்தது. முதலில் ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதிட்டார். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

யாரும் போட்டியிட முடியாத வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது. ஓபிஎஸ் முதலமைச்சராக, நிதியமைச்சகராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். ஓபிஎஸ் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். எந்த வாய்ப்பும் அளிக்காமல் காரணத்தையும் கூறாமல் கட்சியிலிருந்து ஓபிஎஸ்ஐ நீக்கியது நியாயமற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெரும்பான்மை உள்ளது என்பதற்காக எடுத்த முடிவு கட்சி நிறுவனர் எம்ஜிஆரின் நோக்கத்திற்கு விரோதமானது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் ரூ.55 உயர்வு..! விலைவாசி உயர வாய்ப்பு.? - டிடிவி தினகரன்

இரட்டை தலைமை முடிவு தன்னிச்சையானது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது. பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுப்போம் என்ற தோணியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு செயல்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. ஒருங்கிணைப்பாளரை நீக்கம் செய்ய கட்சியில் எந்த விதியும் இல்லை.

பிற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய கட்டமைப்பு அரசியல் கட்சி. அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனக் கூறுவதற்கு, அரசியல் கட்சிகள் சங்கங்களோ, கிளப்களோ அல்ல. கட்சியில் எந்த விதிகள் திருத்தப்பட்டாலும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறும் எதிர் தரப்பினர், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியை திமுக மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் உள்ளது... ஜெயக்குமார் சாடல்!!

பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக கூற எந்த புள்ளிவிவரமும் ஆவணமும் இல்லை. அனைத்தும் காகித வடிவிலே உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் நிபந்தனைகளை நீக்கினால் போட்டியிட தயார்: வழக்கையும் வாபஸ் பெறத் தயாராக உள்ளோம். பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தற்போது 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழியவும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழியவும் வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான நிபந்தனைகள் நீக்கப்பட்டால் ஓபிஎஸ் உட்பட மேலும் பலர் போட்டியிட வாய்ப்பு உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வாதத்தால் அதிமுக விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகள் நீக்கப்படுமா? என வாதிட்டார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், எங்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். நாங்கள்தான் அதிமுக என சில நபர்கள் கூறுவது புதிதல்ல. பன்னீர்செல்வத்தின் சகோதரரே விளக்கம் கேட்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச்செயலாளர் என்பது உலகத்துக்கே தெரியும். பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனக்கு என பன்னீர்செல்வம் தனிக்கட்சி நடத்தி வருகிறார். தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றால் தேர்தல் ஆணையத்தில் மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும். கட்சி கட்டமைப்பின் முக்கிய அம்சமே பொதுக்குழு அதிகாரமிக்கது என்பது தான். கட்சி நடவடிக்கைகளில் முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தது பொதுக்குழு தான்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலை..! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை- தனிச்சட்டம் இயற்றிடுக- சீமான் ஆவேசம்

பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளது. எனவே, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறைகூற முடியாது; கட்சியினரின் குரலாக பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பதால், அதை தடுக்க முடியாது. ஜூன் 23ல் கட்சி அலுவலகத்தை சூறையாடியதே ஜூலை 11 பொதுக்குழுவில் ஓபிஎஸ் தரப்பை நீக்க காரணம். கட்சிக்கும், அதன் தலைவர்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்ததால் நீக்கப்பட்டுள்ளனர். வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற அடிப்படை உறுப்பினர்கள், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கைக்கு ஏற்பவே ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகவில்லை; ரத்து செய்யப்பட்டது. தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரட்டைத் தலைமையால் அரசியல் ரீதியாக முடிவெடுப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் ஒற்றை தலைமையில் செயல்படலாம் என முடிவெடுக்கப்பட்டது. இரட்டைத் தலைமைக்கு கட்சியினர் மத்தியில் ஆதரவு இல்லாததால் ஒற்றைத் தலைமை கொண்டு வரப்பட்டது.

இதுவே பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. இதன் பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியா, இல்லையா என்பது குறித்து பேச அவசியமே இல்லை. 52 ஆண்டுகளில் 47 ஆண்டுகள் பொதுச்செயலாளர் பதவி இருந்து வந்தது. 50 ஆண்டு கால அதிமுக வரலாற்றில் தற்காலிகமாக 5 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டு வரப்பட்டன. தற்போது மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வருவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது; எந்த அடிப்படை கட்டமைப்பும் சிதைந்துவிடாது. அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்ய கால அவகாசம் ஏற்படும் என்பதால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொது செயலாளர் பதவி கொண்டு வருவதால் யாருக்கும் பாதிப்பும் ஏற்படாது. எனவே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கூடாது என வாதிட்டார். இதேபோல் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் தரப்பினர் தங்களது வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios