#Exclusive: தனக்கு அடித்த யோகத்தை தக்கவைத்துக்கொண்டார் ஈபிஎஸ்… மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கருத்து!!
ஒரு கட்சியை நிர்வாகிகள் நடத்தலாமே தவிர நீதிமன்றம் நடத்தக்கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சியை நிர்வாகிகள் நடத்தலாமே தவிர நீதிமன்றம் நடத்தக்கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், அரசியல் இல்லாமல் ஒரு நாடு, மக்கள் என யாருமே இயங்க முடியாது. அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது. நாட்டின் முடிவை எடுக்கும் தலைவர்கள் கூடி பேசும் நாடாளுமன்றம், சட்டமன்றம், கிராம சபை ஆகிய இடங்களில் தொடங்கும் அரசியல் வீடு வரை உள்ளது. அரசியல் இல்லாத இடமே கிடையாது. காற்று இல்லாமல் எவ்வாறு இருக்க முடியாதோ அது போல் அரசியல் இல்லாமலும் யாரும் இருக்க முடியாது. ஒரு விஷயத்திற்கு எதிர் கருத்து உருவானால் தான் ஜனநாயகம் கிடைக்கும். அந்த அடிப்படையில் அரசியல் அனைத்து தளங்களிலும் இருந்தால்தான் ஒரு புரிதல் கிடைக்கும். இல்லை என்றால் சர்வாதிகாரம் தான் இருக்கும். ஒருவர் சொல்வதை அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகும். அது அரசியல் கிடையாது. அரசியல் என்பது ஆளும் கட்சி கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சி சந்தேகத்தை கிளப்ப வேண்டும். அந்த சந்தேகத்தின் பலனாக பல விஷயங்கள் புரிய வரும். ஒன்று திட்டம் தவறாக இருக்கலாம் அல்லது திட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தவறாக இருக்கலாம். மக்களுக்கு இரு பக்கங்களிலும் புரிதல் இருக்கும். அரசியலை கவனிக்கும் மக்களுக்கு மட்டுமே அரசியல் பிடிக்கும்.
இதையும் படிங்க: மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
95% நிர்வாகிகள் எடப்பாடியின் பக்கம் இருக்கிறார்கள். ஆகவே அவரிடமே பொதுச் செயலாளர் பதவி போக வேண்டும். அதன் அடிப்படையில் தான் அவரிடம் அந்த பதவி போயிருக்கிறது. இதற்கு பத்து மாத இடைவெளி காலம் என்பதே அதிகம் என்று நினைக்கிறேன். ஒரு கட்சியை நிர்வாகிகள் நடத்தலாம் நீதிமன்றம் நடத்தக்கூடாது. ஓபிஎஸ் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதில் தவறிக் கொண்டே வந்தார். அப்படி இருக்கையில் திரும்ப வந்து இயக்கத்தில் மனமிரங்கி சமாதானமாக நான் போய் விடுகிறேன். எனக்கு பதவி கொடுங்கள் என்று கேட்டாலும் கொடுக்கும் இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறாரா என்றால் அது கேள்விக்குறியே. ஒரு தலைவர் உருவாகிறார், அவர் இரண்டாம் இடத்தில் இருந்தார், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார் இவை அனைத்தும் அந்தந்த காலகட்டங்களில் பேசப்படும் பேசப்பொருள். அவ்வளவுதான். ஓபிஎஸ்-க்கு ஜெயலலிதா கொடுத்த நெருக்கடி பற்றி அனைவருக்கும் தெரியும். நத்தம் விஸ்வநாதனுக்கு என்ன நெருக்கடி கொடுத்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அனைவரும் நெருக்கடியை அனுபவித்தவர்கள் தான். ஆர்.என்.வீரப்பன் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக இருந்தார். கட்சியை வழி நடத்தியவர்.
கட்சியின் அடுத்த கட்ட தலைவராக ஜெயலலிதாவிற்கு சமமாக பார்க்கப்பட்டவர். ஆனால் அவர் 1996-க்கு பிறகு என்னானார். ஓபிஎஸ் மிகப் பெரிய அரசியல் போராளி, அவர் எதிர்க்கட்சிகளை பந்தாடக்கூடிய மாபெரும் தலைவர் என யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை அவர் அவ்வாறு செயல்பட்டதும் இல்லை. அவரால் எடப்பாடியையே சமாளிக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் கட்சி தலைவராக இருந்தார், ஒருங்கிணைப்பாளராக இருந்தார், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் எடப்பாடி. இப்படி இருக்கையில் ஓபிஎஸ் தன் பக்கத்தில் எத்தனை பேரை வைத்துள்ளார். அவர் தனது பக்கத்தில் 20 எம்.எல்.ஏ அல்லது 15 எம்.எல்.ஏ, 4 எம்.பி., 50 நகரச் செயலாளர்கள், 40 ஒன்றிய செயலாளர்களையாவது வைத்திருக்க வேண்டும். ஆனால் யாரும் அவரிடம் இல்லை. இருவருக்கும் யோகம் அடித்தது ஓபிஎஸ்-க்கு பலமுறை யோகம் அடித்தது. ஆனால் இபிஎஸ்க்கு ஒரு முறை தான் யோகம் அடித்தது. அதை அவர் தக்க வைத்துக் கொண்டார். அப்படித்தான் இதை பார்க்க வேண்டும். ஒரு சில தலைவர்களுக்கு ஒரு முறை யோகம் அடிக்கும்.
இதையும் படிங்க: கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று என் சமாதியில் எழுதுங்கள்... துரைமுருகன் நெகிழ்ச்சி!!
அதன் பிறகு அவர்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிலர் தலைவர்களாகவே இருப்பார்கள். ஆனால் தலைமை பதவியை அடைய முடியாது. இரண்டாம் கட்ட தலைவராகவே கடந்து சென்று விடுவர். திமுகவில் இல்லாத தலைவர்கள் கிடையாது. அண்ணாவுக்கு பிறகு நெடுஞ்செழியன் தான் கட்சித் தலைவராக வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கலைஞர் கருணாநிதி வந்தார். அதேபோல் அதிமுகவில் எம்ஜிஆருக்கு பிறகு பல தலைவர்கள் இருக்கையில் ஜெயலலிதா தலைவராக வந்தார். அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அதுதான் அரசியலில் முக்கியம். பொதுச்செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துவிட்டது. அவர் திமுகவிற்கு எதிரான ஒரு வலிமையான அரசியலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. இனி அவர் தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும். 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கணிசமான வெற்றி, 2026 இல் ஆளுங்கட்சியில் வீழ்த்துகிற வெற்றி என்று அடுத்தடுத்து சென்றால் மட்டுமே அவருக்கென ஒரு பலம் கிடைக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.