கரூரில் மக்களவை தேர்தலை நிறுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான அன்பழகன் மற்றும் வேட்பாளர் ஜோதிமணி விவாதம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான அன்பழகன் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது, ’’நள்ளிரவு 12 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் எனது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர். புகார் கொடுக்க வந்ததாக கூறினர். நான் காலையில் வருமாறு கூறினேன். அதற்கு அவர்கள் என்னை மிரட்டினர். எனது உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டனர். இது கரூர் வேட்பாளர் ஜோதிமணி, செந்தில்பாலாஜி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் செந்தில்தான் காரணம். இது சம்பந்தமாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தேன்’’ என அவர் புகார் கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் ஆட்சியர் அன்பழகனும் செல்போனில் பேசிய ஆடியோ உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ’எனது இல்லத்துக்கு வழக்கறிஞர் செந்தில் 100 பேருடன் வந்ததை குறிப்பிட்டார். ஒரு மனு கொடுக்க நேரம் காலம் இல்லையா? எனக் கேட்கிறார். அதற்கு ஜோதிமணி, ’நாங்கள் தண்ணீர் இல்லை, கரண்ட் இல்லை என மனு கொடுக்க வரவில்லை. நீங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி. 24 மணிநேரமும் பணியில் இருக்க வேண்டியவர். மனு கொடுக்க 100 பேரெல்லாம் வரவில்லை.

தேர்தல் அதிகாரியின் உத்தரவுக்கு சவால் விடுவது போல் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுக்க வந்த எங்கள் மீது வழக்கு தொடுத்துள்ளீர்களே இது நியாயமா? எங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் தேர்தல் நடத்தும் அதிகாரியான உங்களை சந்திக்காமல் நாங்கள் யாரை சந்திப்போம்? எனக் கேட்கிறார் ஜோதிமணி. ஒருகட்டத்தில் ஆட்சியரோ, ’கரூரில் தேர்தலை நிறுத்த நான் பரிந்துரை செய்வேன்’’ என்கிறார். அதற்கு ஜோதிமணியோ தேர்தலை நிறுத்துவது என்பது அவ்வளவு சாதாரணம் ஆகிவிட்டதா? இதில் எத்தனை பேர் உழைப்பு உள்ளது. மொத்தம் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நாங்கள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தேர்தலை நிறுத்துவோம் என நீங்கள் சொல்லலாமா? அதுதான் உங்கள் எண்ணம் என்பது எங்களுக்கு தெரியும். அதை நீங்களாகவே தெரிவித்து விட்டீர்கள். 

எங்களுக்கு மக்கள் இருக்கிறார்கள். நாங்கள் மக்களை தினமும் சந்திக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, உங்கள் மீது அல்ல’’ என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.