நாடாளுமன்ற உறுப்பினராகும் ஆசையில்தான் அதிமுகவோடு இணைந்து செயல்பட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அண்மையில் சேலத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. தீபா, “அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார். அதே வேளையில், “ஜெ. தீபா அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்” என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஜெயலலிதா சாயலில் உள்ள ஜெ. தீபா அதிமுகவுக்கு வருவது பிரசாரத்துக்கு உதவும் என்ற வகையில் அதிமுக முக்கிய தலைவர்கள் பலரும், அவரது வருகைக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள்.

ஆனால், 2017-ல் அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்த ஜெ. தீபா, இருவரும் இணைந்து செயல்படுவோம் என்று குறிப்பிட்டார். ஆனால், அதன்பிறகு தனியாகப் பேரவை அமைத்து செயல்படத் தொடங்கினார். இந்த முறை அப்படியில்லாமல் அதிமுகவுடன் இணைந்து செயல்பட உறுதியாக இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தைகளிலும் தீபா தரப்பு இறங்கியுள்ளது. தற்போது அதிமுகவுடன் இணைந்து செயல்பட தீபா இரு நிபந்தனைகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதிமுகவில் இணைந்த பிறகு கட்சி பதவியும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் தர வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனைகள். ஜெயலலிதா அதிமுகவில் இணைந்த பிறகு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி,  மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டன.

அதைபோலவே தீபாவும் எதிர்பார்ப்பதாக அதிமுக தரப்பிலும் சொல்கிறார்கள். நிபந்தனைகள் ஏற்கப்படும்பட்சத்தில் கட்சியில் இணையும் பணிகளும் தீவிரமாகலாம். ஆனால், இதற்கு அதிமுக சார்பில் எந்த உறுதியும் தீபாவுக்குத் தரப்படவில்லையாம். இதனால், தொடங்கிய பேச்சுவார்த்தை அதே நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.