வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற இரண்டு ஆண்களிடம் உடனே கர்ப்ப பரிசோதனை செய்யும்படி அரசு மருத்துவர் பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதெல்லாம்,  தலைவலிக்காக  மருத்துவமனைக்கு சென்றால் அங்கு வயிற்று வலிக்கு சிகிச்சை கொடுக்கும் நிலைதான் உள்ளது. காரணம் ஏழை நோயாளிகள் என்றால் அரசு மருத்துவமனைகளில் காட்டப்படும் அலட்சியமும்,   சிகிச்சை வழங்குவதில் இருக்கும் கவனக்குறைவும்தான் அதற்கு காரணம். ஏற்கனவே அரசு மருத்துவர்கள் மீது  இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில், இந்த புகார்கள் அனைத்தையும்  தூக்கிசாப்பிடும் வகையில்  ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தைச் சார்ந்த  அரசு மருத்துவமனை மருத்துவர் முகேஷ் குமார், இவர் பொது மருத்துவராக இங்கு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த காமேஸ்வர் ஜன்ஹூ,  மற்றும் கோபால் கஞ்சு, என்ற இருவர் வயிற்றுவலிக்காக சிகிச்சைபெற அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மருத்துவர் முகேஷ் குமார் இருவரையும் பரிசோதித்த பின்னர் , இருவரும் கர்ப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என அவர்களிடம் கூறியதுடன்,  வயிற்றை ஸ்கேன் செய்யவும் பரிந்துரை செய்துள்ளார்.

அத்துடன்  எச்ஐவி பரிசோதனை,  மற்றும் ஹீமோகுளோபின் சோதனை, உள்ளிட்டவைகளையும் எடுக்க முகேஸ்குமார் சீட்டு எழுதி கொடுத்துள்ளார்.  மருத்துவர் கூறிவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரும்.  மருத்துவர் தங்களிடம் வித்தியாசமான முறையில்  நடந்து கொண்டது குறித்து  மாவட்ட மருத்துவ அதிகாரி அருண்குமாரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில்,  மருத்துவர் முகேஷ் குமார் மீது, விசாரணை மேற்கொள்ள மாவட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.  ஏற்கனவே இதே போன்ற வேறொரு புகாரில் மருத்துவர் முகேஷ் குமார் தண்டிக்கப்பட்டு மீண்டும் அவர் பணியில் சேர்ந்துள்ள நிலையில் அவர்மீது  மீண்டும் புகார் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில்  தம்மீது சொல்லப்படும் புகார் பொய் என மருத்துவர் முகேஸ் மருத்துள்ளார்.