டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து எடப்பாடி பழனிசாமி பொறாமைப்படுவதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து எடப்பாடி பழனிசாமி பொறாமைப்படுவதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவால திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த அலுவலகத்தை திறந்து வைக்க 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பிரதமர் மோடி, காங். தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து இன்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார். இதற்கிடையே தன்னையும், தன் குடும்பத்தையும் பிரதமர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

இந்த நிலையில் டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து எடப்பாடி பழனிசாமி பொறாமைப்படுவதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நலனுக்காகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார். மேலும் தமிழ்நாட்டு நலன் சார்ந்த 14 கோரிக்கைகளை அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் அளித்துள்ளார். தமிழக முதல்வர் கோரிக்கைகளை எடுத்துரைத்த போது, அதனை பிரதமர் உன்னிப்பாகக் கவனித்ததை அனைவரும் அறிவர்.

இலங்கை பிரச்சனை உள்பட கடல் கடந்து வாழும் தமிழர்களுக்காகவும் மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தன்னைக் காப்பற்றிக் கொள்ள எந்த தேவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்கள் எல்லோரும் டெல்லி வந்தது அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளத்தான். டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் வரவேற்பை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவருக்கு கிடைக்கும் மரியாதையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி அவதூறு பேசி வருகிறார் என்று தெரிவித்தார். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
