கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ள நிலையில், பாஜகவை வெளியிலிருந்து ஆதரிக்க வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ. ஒருவர் குமாரசாமிக்கு யோசனை கூறியுள்ளார்.
 கர் நாடக முதல்வராக எடியூரப்பா நேற்று மாலை பதவிஏற்றுக்கொண்டார். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூவாலா பாய் உத்தரவிட்டுள்ளார். ஆனால், 29-ம் தேதியே மெஜாரிட்டியை நிரூபிக்கப் போவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார். சபையில் அவர் மெஜாரிட்டியை நிரூபிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில்  பாஜகவோடு கூட்டணி அமைக்க வேண்டு என்று குமாரசாமிக்கு மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ. ஜி.டி. தேவகவுடா தெரிவித்துள்ளார்.


மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஜி.டி. தேவகவுடா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “சட்டப்பேரவையில் காங்கிரஸுடன் இணைந்து எதிர்க்கட்சி வரிசையில் மதசார்பற்ற ஜனதா தளம் உட்காருவதைவிட பாஜகவுக்கு ஆதரவு அளிக்கலாம். அந்த ஆதரவை வெளியில் இருந்து அளிகலாம். இதன்மூலம் பாஜகவுடன் கூட்டணியைப் புதுப்பித்துகொண்டால் நம் கட்சிக்கு நல்லது. ஆனால், இதை குமாரசாமிதான் முடிவு செய்ய வேண்டும்” என்று அதிரடியாகக் கருத்து தெரிவித்தார்.


எடியூரப்பா சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க தயாராகிவரும் நிலையில், தங்கள் ஆட்சியைக் கவிழ்க்க அல்லும்பகலும் உழைத்த பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ. கருத்து  தெரிவித்திருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.