காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் போராட்டக் களத்தில் குதிக்கிறார். நாளை ஈரோட்டில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீபா அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு
தெரிவித்து சென்னையில் மகிப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. 

ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என தமிழ் அமைப்புகள் கூறியிருந்தன. இதற்கு ஐபிஎல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனால், நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பலரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருவிடைந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சிக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அவரின் வருகையின்போது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின், தீபா பேரவை சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், ஈரோடு ரயில் நிலையம் அருகில் நாளை காலை 11 மணியளவில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தல் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டுவதாகவும் அந்த பதிவில் தீபா குறிப்பிட்டுள்ளார்.