Jayram thakoor selected as cm of Himachal Pradesh

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதல்வராக 5-முறை எம்.எல்.ஏ.கவாக இருக்கும் ஜெய்ராம் தாக்கூர் வரும் 27-ந்தேதி பதவி ஏற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜனதா வெற்றி

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் 42 இடங்களை பா.ஜனதா கட்சிகைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.

குழப்பம், இழுபறி

தேர்தலில் தோற்றவரும், முன்னாள் முதல்வருமான பிரேம் குமார் துமால் தரப்பு ஆதரவாளர்களுக்கும், மற்றொரு எம்.எல்.ஏ.ஜெய் ராம் தாக்கூர் தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானதால், யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில் இழுபறியும், குழப்பமும் நீடித்து வந்தது.

பரிந்துரை

இந்நிலையில், பா.ஜனதா கட்சியின் மேலிடப் பொருப்பாளர்கள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் முன்னாள் முதல்வர் சாந்தா குமார் ஆகியோர் ஜெய்ராம் தாக்கூரின் பெயரை தலைமைக்கு பரிந்துரை செய்தனர்.

தேர்வு

 கட்சியில் மோதல் போக்கைக் கைவிட்ட முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமாலும், தாக்கூர் பெயரை கட்சி மேலிடத்தில் பரிந்துரைத்தார். இதையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும ஒருமனதாக தாக்கூரை முதல்வராக தேர்வு செய்தனர்.

ஆட்சிஅமைக்க உரிமை

இதன்பின், ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஜெய்ராம் தாக்கூர் தனக்கு இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் உரிமை கோரினார்.

மோடி பங்கேற்பு

இதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டதையடுத்து, வரும் 27-ந்தேதி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பா.ஜனதா ேதசிய தலைவர் அமித் ஷா , மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

இது குறித்து முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், “ என்னை முதல்வராக தேர்வு செய்த அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மத்திய குழுவுக்கும், எனது பெயரை ஜே.பி. நட்டா, சாந்தா ராம் ஆகியோருக்கு பரிந்துரைத்த முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமாலுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன்’’ என்றார்.

52வயதாகும் ஜெய்ராம் தாக்கூர் தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். கடந்த முறை துமால் ஆட்சியில் அமைச்சராகவும், மாநிலத் தலைவராகவும் ஜெய்ராம் தாக்கூர் இருந்த அனுபவம் கொண்டவர்.