விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை மறைந்த ஜெ.அன்பழகன் ஜாமீனில் எடுத்ததாக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இயக்குனர் அமீர். 

திமுக தலைவர்களில் ஒருவரான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  மரணம் அடைந்தார். அவரைப் பற்றி பலரும் கட்சிகள் தாண்டி அனைத்து தலைவர்களும் அன்பழகனை புகழ்ந்து பேசினார்கள்.திமுகவில் மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏவாக சிங்கம் போல் ஆளும் கட்சிக்கும் தன் கட்சித்தலைவருக்கும் திகழ்ந்தவர் அன்பழகன். அரசியல்வாதி என்கிற அவதாரத்தை தாண்டி ஒரு தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தராக சினிமாத் துறையிலும் கால் பதித்தவர் ஜெ.அன்பழகன். அந்த வகையில் இயக்குனர் அமீரும் அவருக்கு நெருக்கமானார்.

ஜெ.அன்பழகன் மறைந்ததும், இயக்குனர் அமீர் பல்வேறு ஊடகங்களில் ஜெ.அன்பழகனின் ஆளுமை குறித்து பதிவு செய்தார். இதற்கிடையே இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமீர், ‘1982-ல் பிரபாகரன் பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு நிகழ்வில் கைதானதும், அவரை ஜாமீனில் வெளியே எடுத்தவர் ஜெ.அன்பழகன் தான். கலைஞர் கூறியதால், சென்னை தி.நகரில் தனது அலுவலகத்தில் 21 நாட்கள் தங்க வைத்திருந்தார்.

பிரபாகரனுக்கு சாப்பிடத் தேவையானவற்றை கேட்டுக் கேட்டுச் செய்தார் அன்பழகன். ஈழ அரசியலைப் பற்றி அப்போது அவருக்கு பெரிய புரிதல் இல்லாவிட்டாலும், கலைஞர் சொன்னதால் மாவட்டச் செயலாளராக இருந்த அன்பழகன் இவற்றைச் செய்தார். இதையெல்லாம் அன்பழகனே என்னிடம் கூறியிருக்கிறார். என வீடியோ பேட்டியில் கூறியிருக்கிறார் அமீர்.

இது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. காரணம், அந்தக் காலகட்டத்தில் திமுக.வில் மாவட்டச் செயலாளராக ஜெ.அன்பழகன் இல்லை. தவிர, திமுக.வின் தற்போதைய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பழ நெடுமாறன் ஆகியோர் ஏற்பாட்டில் பிரபாகரன் ஜாமீனில் எடுக்கப்பட்டார். பழ நெடுமாறன் தன்னுடன் பிரபாகரனை மதுரைக்கு அழைத்துச் சென்று தனது இல்லத்தில் தங்க வைத்திருந்தார். இதுதான் வரலாறு!

இதற்கான வாழும் சாட்சிகள் பலர் இருக்க, அமீர் ஏன் இப்படிப் பேசினார்? என்பது சமூக வலைதளங்களில் விவாதமாக போய்க்கொண்டிருக்கிறது. இதெல்லாம் சீமானுக்குத் தெரியுமா? என சிலர் அமீரை கலாய்க்கிறார்கள்.