Jayanand says yes we are Mannargudi mafia but mafia needed to fight dmk mafia
சினி ஃபீல்டினுள் நுழையும் பழைய ஹீரோவின் புதிய வாரிசு போல் பஞ்ச் டயலாக் அடித்தபடி அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கிறார் சசிகலாவின் மருமகன் ஜெயானந்த்!
(திவாகரன் ஏதோ ஒரு கணிப்புலதான் அன்னைக்கே ‘ஜெய’ங்கிற பெயரையும் ஒட்டிவிட்டிருக்கார் போல)
ஒரு ஆங்கில சானலுக்கு செம ஹாட்டாக பேட்டி தட்டியிருக்கும் ஜெயானந்த் தன் அப்பா திவாகரன் போலவே தானும் அசால்ட் அதிரடி பேர்வழிதான் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் திவாவை விட சில படிகள் மேலேயே சென்றிருக்கிறார். திவா பொதுவாக பத்திரிக்கைகள்,மீடியாக்களை எதிர்கொள்வது கிடையாது. ஆனால் ஜெய்யின் ஆரம்பமே அரசியல் சரவெடியாகத்தான் இருக்கிறது.
.jpg)
சரி பேட்டியில் அப்படி என்னதான் வெடித்திருக்கிறார் ஜெயானந்த்?!...
“எனக்கு அரசியல் ஆசை இருக்குது. ஆனா சரியான டைம் வரும்போது உள்ளே இறங்குவேன். நான் அ.தி.மு.க.வின் உறுப்பினர்தான். அரசியலை தெளிவா கவனிச்சுட்டுதான் இருக்கேன்.
ஆமாங்க நாங்க மன்னார்குடி மாஃபியாதான். ஆனா தி.மு.க. மாஃபியாவுக்கு எதிரா போராட வந்த மாஃபியா.
இப்பவும் சசிகலா அத்தைதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர். எடப்பாடி எங்களோடு எல்லா நிலைகளிலும் இருக்கிறார். எல்லா மாவட்ட செயலாளர்களும் சசி அத்தையோட பேர்லதான் ரெட்டை இலை சின்னத்தை மீட்க அஃபிடவிட் கொடுக்கிறாங்க. அப்படின்னா அத்தையோட பலமும், இடமும் இப்போ புரியுதில்லையா! தேவைப்பட்டா எடப்பாடியார் அத்தையை சந்திப்பார்.
.jpg)
அதே நேரத்தில முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு நடவடிக்கைகளில் நாங்க எப்போதுமே மூக்கை நுழைக்க மாட்டோம்.
நோ நோ நோ! பன்னீர் அணியோடு இணைப்பு ஒரு காலத்திலும் நடக்காது. இப்பவும் எங்களுக்கு புதிரா இருக்குது, ஏன் ஓ.பி.எஸ். அப்படி நடந்துக்கிட்டார்னு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயில் விபரங்கள் எல்லாமே சசி அத்தைக்கு மட்டும்தான் தெரியும்.
பா.ஜ.க.வும், தி.மு.க.வும் எவ்வளவு முயன்றாலும் இரட்டை இலைக்கு இருக்கிற மாஸை தகர்க்க முடியாது.
சம்பந்தா சம்பந்தமில்லாம தீபா நடந்துக்கிறாங்க, பேசுறாங்க. போயஸ் கார்டன் இல்லம் பற்றி முடிவு பண்ணும் உரிமை சசி அத்தைட்டதான் இருக்குது. தீபா, தீபக் ரெண்டு பேருக்குமே இதுல எதுவுமில்லை.

பரம்பரையாவே நாங்க பணக்காரங்கதான் அதனால குறுக்கு வழியிலேயே, தப்பான முறையிலேயோ சொத்துக்களை அடைய வேண்டிய அவசியமேயில்லை.
எங்க அப்பா இரண்டு முறை ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியவர். அவங்க இதை நல்லாவே உணர்ந்திருந்தாங்க.
சார் முதல்வரம்மாவின் இறப்பிற்கு பிறகு கழகம் இப்பவும், எப்பவும் சசிகலா அத்தையிடம்தான் இருக்குது, இருக்கும். ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு எப்படி இருக்கணும்னு சசி அத்தை முடிவு செய்வாங்க. டி.டி.வி.தினகரன் கூட கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் குடும்பம்னு வர்றப்ப நாங்களெல்லாம் ஒண்ணுதான்.

நிச்சயமாங்க! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த வீடியோவை தேவைப்படும் நேரம், சூழல் உருவாகையில் நிச்சயம் வெளியிடுவோம். அவங்க மரணத்தை சர்ச்சை, புதிர்ன்னு சொல்லி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறவங்க அப்போ ஓடி ஒளிய வேண்டியிருக்கும்.
நாங்க ஒண்ணும் அதானி, அம்பானி மாதிரி பிஸ்னஸ் ராஜ்ஜியம் நடத்தலை அதனால எங்களை டார்கெட் பண்ண வேண்டிய அவசியமில்லை. வருமான வரித்துறை ரெய்டின் போது மோடியின் பெயர் கூட ஒரு டைரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுச்சு. ஆனா அதை வெச்சு ஒரு வழக்கும் உருவாகலையே!
ரஜினி அரசியலுக்கு வரலாமான்னா...ம்ம்ம்...முதல்ல அவர் தன்னுடையை மன நிலையை சொல்லட்டும் அப்புறம் நாம அதைப்பத்தி பேசலாம்.

இப்போ இருக்கிற சூழலை பயன்படுத்தி தி.மு.க.வோ பா.ஜ.க.வோ அல்லது வேற அரசியல் அமைப்புகளோ அரசியல் விளையாட்டுகளை நடத்தலாம். ஆனால் இதெல்லாம் எங்கள் கழகத்தை ஆட்டவோ, அசைக்கவோ செய்யாது.
சசி அத்தையை ஜெயிலுக்குள் அனுப்ப சொல்லி சிலருக்கு சில பிரஷர் இருந்துச்சு. எதையும் திடமா இப்போ சொல்ல முடியாது. ஆனால் இதை முறியடிக்க நாங்க சட்ட ரீதியா போராடுவோம்.
கொடநாடு சொத்து பற்றி அதை விற்பனை செய்தவரின் குடும்பத்தை சேர்ந்த பீட்டர் பேசுறது எல்லாமே பொய். கொடநாடு பங்களாவினுள் செல்ல, அதை இயக்க எங்களிடம் உரிமை இருக்குது. பிறகு எதுக்கு பாஸ் நாங்க அங்கே ஆளை அனுப்பி ஆவணங்களை திருடணும்? ” _ என்று தட்டியெறியிருந்திருக்கிறார் ஜெயானந்த்.
இந்த பேட்டி என்னென்ன லூட்டிகளை கழகத்தினுள் கொண்டுவரப்போகிறதோ!
