அந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்துதான் அவரை உலகத் தலைவர்கள் எல்லாம் சந்தித்தனர்.  முக்கிய பிரமுகர்கள் பலரும் அம்மாவைச் சந்தித்தனர். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தீபா, தீபக் தாமாக முன்வந்து நினைவிடமாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை, முந்தைய அதிமுக அரசு, நினைவு இல்லமாக மாற்றியது. இதை எதிர்த்து தீபாவும் தீபக்கும் தொடர்ந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வெளியானது. அதன்படி அரசு நினைவு இல்லமாக ஜெயலலிதா இல்லம் மாற்றப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து போயஸ் கார்டன் வீட்டு சாவியைக் கேட்டு தீபாவும் தீபக்கும் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டனர். அதன்படி அவரும் வீட்டுச் சாவியை தீபா, தீபக்கிடம் ஒப்படைத்தார். இதனால், அதிமுகவினர் வருத்தம் அடைந்தனர். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தொடர்பாக அதிமுக சார்பில் மேல் முறையீடு செய்வோம். கட்சியின் நிதியைப் பயன்படுத்தி அந்த இடத்தை வாங்குவது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்ய வேண்டும். ஜெயலலிதா, வாழ்ந்து மறைந்த இடம் அதுதான். அது மட்டுமல்ல, அந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்துதான் அவரை உலகத் தலைவர்கள் எல்லாம் சந்தித்தனர். முக்கிய பிரமுகர்கள் பலரும் அம்மாவைச் சந்தித்தனர். எனவே அந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்றினால், அங்கு வந்து இல்லத்தைச் சுற்றி பார்க்க தமிழகம், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, உலகளவில் சுற்றுலா பயணிகள் வருவர்.

என்னைப் பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தீபாவும் தீபக்கும் தாமாக முன்வந்து நினைவிடமாக மாற்ற அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அளித்தால் அவர்கள் வரலாற்றில் நிற்பார்கள்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.