2011 சட்டமன்ற தேர்தலின் மூலம் முரட்டு செல்வாக்குடன் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. மரண சறுக்கலை சந்தித்தது தி.மு.க. இந்த தேர்தலுக்காக தொய்வே இல்லாமல் உழைத்ததாலும், அரசை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று இயங்க ஆரம்பித்ததாலும்  ஓய்வுக்காக ஏங்கினார் ஜெயலலிதா. விளைவு, கோடநாடு நோக்கி கிளம்பினார்.  கூடவே சசிகலா உள்ளிட்ட படைபரிவாரங்களும் கிளம்பின. 

அந்த சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் முன்பும் அவர் தங்கியிருந்தது கோடநாடு பங்களாவில்தான். அங்கிருந்து கிளம்பும் முன் ‘அடுத்த முறை இங்கே முதலமைச்சராகதான் காலெடுத்து வைப்பேன்’ என்று சபதம் போட்டுவிட்டுதான் கிளம்பினார். அதை அப்படியே நிறைவேற்றவும் செய்தார். கோடநாடு சென்று பங்களாவில் சில நாட்கள் தங்கிவிட்டு முதல்வர் தலைநகர் திரும்புவார்! என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாட்கள் நகர்ந்தன முதல்வர் கிளம்பவில்லை. இதில் எதிர்கட்சியான தி.மு.க. கடும் டென்ஷனாகிவிட்டது. இந்த நேரத்தில் கைத்தறி நெசவாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட சில முக்கிய பிரச்னைகள் மாநில அளவில் எழுந்தன. 

உடனே கருணாநிதி... “கும்பி காயுது, கூழுக்கு அழுவுது கோடநாடு ஒரு கேடா?” என்று அன்று காமராஜரை பார்த்து கேட்ட அதே கேள்வியை ஜெயலலிதாவை பார்த்தும் கேட்டார். டென்ஷனின் உச்சத்துக்கே போய்விட்டார் ஜெயலலிதா. உடனே எடுத்துவிட்டார் ஒரு சவடால் பதில் அறிக்கையை தானும் ஒரு மனுஷிதான், ஓயாத மக்கள் பணிகளுக்கு இடையில் சில நாட்கள் கோடநாடில் இருக்கும் என் சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறேன், இங்கிருந்தும் அரசு பணியைதான் செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒன்றும் ஓய்வாகவோ, ரிலாக்ஸ்ட் செய்து கொண்டோ இல்லை. அயராது அரசு பணியையும், மக்கள் பணியையும்தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்! என்று விளாசினார். 

இதை மெய்ப்பிக்கும் விதமாக முதல்வரின் கோடநாடு பங்களா என்பது அவரது முகாம் அலுவலகமே, தலைமை செயலர் -2 இங்கே தங்கியிருந்து பணிபுரிந்து கொண்டிருக்கிறார், கோட்டையிலும் முதல்வரின் போயஸ் முகாம் அலுவலகத்திலும் இருக்கும் அனைத்துவித வசதிகளும் இங்கேயும் இருக்கின்றன, காவல்துறை தலைமையும் இங்கே பக்காவாக ரிப்போர் செய்தபடி மாநில சட்ட ஒழுங்கை கண்காணித்து வருகிறது, மாநிலத்தில் நடக்கும் எந்த ஒரு எமர்ஜென்ஸி நிலையை குறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்திடவும் இங்கே அரங்க வசதிகள் உள்ளன, சொல்லப்போனால் மினி சட்டசபையே நடத்திடலாம்! என்பது போன்ற தகவல்கள் கசியவிடப்பட்டன. 

இதை மக்கள் வாய்பிளந்து பார்த்ததோடு, ‘அம்மா அம்மாதான்யா’ என்று சிலாகித்தனர். அதன்பிறகு நெடு நாள் கழித்து ஜெயலலிதா அங்கிருந்து கிளம்பினார்... அதெல்லாம் தனிக்கதை. சரி அந்த பழைய விஷயங்கள் இப்போது எதற்கு? என்கிறீர்களா! காரணம் இருக்கிறது...

அதாவது கோடநாடு பங்களாவில் தங்கியிருக்கும் ஜெயலலிதா மாலை நேரங்களில் தனது எஸ்டேட்டில் இருக்கும் ஏரியை சுற்றி பேட்டரி காரில் பயணம் செய்து இளைப்பாறுகிறார். சில சமயங்களில் சசியை பக்கத்தில் அமரவைத்து, தானே பேட்டரி காரை இயக்குகிறார்! என்று சில புலனாய்வு வார பத்திரிக்கைகளில் கட்டுரைகள் வந்தன. 

முதல்வருக்கு இருக்கும் அதிக போலீஸ் பாதுகாப்புகள் பத்தாது என்று, வீரப்பன் தேடுதல் வேட்டையில் இருந்த சிறப்பு அதிரடிப்படையையும் (STF) இங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். அந்த வீரர்கள் வழக்கமான் பச்சை நிற யூனிஃபார்ம் அணிந்து தேயிலை தோட்டங்களுக்குள் பதுங்கி பாதுகாவல் புரிகின்றனர். மாலை வேளைகளில் ஜெயலலிதா தன் எஸ்டேட் சாலையில் பேட்டரி காரில் செல்வதை இந்த வீரர்கள் பார்த்து பரவசமாகியிருக்கின்றனர். ஆனால் ‘இதை வெளியில் சொல்ல கூடாது.’ என்று தலைமை அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது! என்றும் எழுதப்பட்டது. அதை மறுத்தது கோடநாடு பங்களா நிர்வாகம். கூடவே ஜெ.,வுக்கு சொந்தமான எஸ்டேட்டில் உள்ள ஏரியில் ஜெ., சசி இருவரும் போட்டிங் போகின்றனர்! என்ற தகவலை கண்கள் சிவக்க மறுத்திருந்தார் ஜெயலலிதா. 

ஆனால் இப்போது வெளியாகி வரும் புகைப்படங்கள் அன்று கோடநாடு பற்றி எழுதப்பட்டவையெல்லாம் உண்மையே! என்று நிரூபிக்கின்றன. எஸ்டேட்டில் ஏரிக்கரையில் ஜெ., பேட்டரி காரை ஓட்டிச்செல்ல, பக்கத்தில் தொப்பி அணிந்தபடி சசி உட்கார்ந்திருக்கும் போட்டோ வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது இன்னொரு போட்டோ வைரலாகி வருகிறது. 

அதாவது எஸ்டேட் ஏரியில் ஜெயலலிதா ஹாயாக போட்டிங் போகும் போட்டோ அது. நான்கு பேர் பயணிக்கும் பெடலிங் டைப் போட் அது. முன்புறம் சசிகலாவும், டாக்டர் வெங்கடேஸும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பெடல் போட்டு போட்டை இயக்குகின்றனர். போட்டின் பின் இருக்கையில் ஜெயலலிதா சந்தோஷம் பொங்க அமர்ந்திருக்கிறார். குளிரை தாங்கும் முழு நீள கவுன் அணிந்து, கழுத்தில் மஃப்ளர் சுற்றியிருக்கிறார். அதே பின் இருக்கையில் ஜெ.,விடமிருந்து நன்கு தள்ளி ஊதா நிற யூனிஃபார்மில் ஒரு நபர் அமர்ந்திருக்கிறார். நீச்சல் தெரிந்த, பாதுகாப்பு பணியாளராக கூட இருக்கலாம். டாக்டர் வெங்கடேஸும், சசியும் மிக கூலாக பெடலிங் செய்யும் அந்த போட்டோ தெறிக்க விடுகிறது.

ஆக கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஜெயலலிதா ரிலாக்ஸ்ட் செய்து கொண்டது இதோ நிரூபணமாகிறது! என்று விமர்சகர்கள் சவுண்டு விடுகின்றனர். ஆனால், ‘இந்த போட்டோ அம்மா முதல்வராக இல்லாதபோது கோடநாட்டில் எடுக்கப்பட்டது.’ என்று மறுத்து சொல்லி, அவரை காப்பாற்ற கூட அ.தி.மு.க.வின் அதிகார மையங்கள் யாரும் முன் வரப்போவதில்லை! என்பது தனி கதை. 

இந்த  இடத்தில் இன்னொரு சுவாரஸ்யத்தையும் பார்க்க வேண்டும். ஜெயலலிதா முதல் முறை முதல்வராக இருந்தபோது தனது புடவைக்கு மேட்சிங்காக மேல் அங்கி ஒன்றை அணிவதை ஸ்டைலாக வைத்திருந்தார். வளர்ப்பு மகன் திருமண வைபவம் போன்ற சமயங்களின் போட்டோக்களில் இதை காண முடியும். அதன் பிறகான காலங்களில் அதை தவிர்த்தார். 

ஆனால் கோடநாடில் இருக்கும் காலங்களில் பழைய அங்கி போன்ற ஒன்றை குளிருக்காக அவர் ஸ்பெஷலாக டிஸைன் செய்து பயன்படுத்தியது இப்போது தெரிய வருகிறது. பல வண்ணங்களில் அந்த ஆடையை டிஸைன் செய்து ரெடி பண்ணி வைத்திருந்ததோடு அதற்கு காண்ட்ராஸ்ட் நிறத்தில் மஃப்ளர்களையும் பயன்படுத்தியிருக்கிறார். போட்டோக்களில் அவரது ஆடைகள் பளீச்சென அவரது தேஜஸை உயர்த்திக் காட்டுகின்றனர். ஹும்! அதனால்தான் அவர் ஜெயலலிதா.